பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்; கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் நெகிழ்ச்சி!
மதங்களை கடந்து மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இஸ்லாமியர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சேலம் மாநகரில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கும் அளவுக்கு பிரபலமானது. இந்த கோயிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்னர் 30 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதனை விரைந்து நடந்த வலியுறுத்தி பக்தர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பழுதான கோயில் மண்டபங்கள் புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்றது. தொடர்ந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயில் வளாகத்தில் முகூர்த்த கால் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இதனையடுத்து கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நடப்பட்டது. நேற்று முன்தினம் (அக்டோபர் 25) கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.
நேற்று காலை 8 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மன் கருவறை முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டப்பந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு 3 ஆம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மேலும் மாரியம்மனுக்கு அண்ணனான கருதப்படும் அழகிரிநாதர் கோயிலில் இருந்து 108 வகையான சீர்வரிசை பொருட்களும் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் கும்பாபிஷேக தினமான இன்று கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புன்யாகவஜனம், சோம கும்ப பூஜை, 4 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன்பின்னர் காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னிதி விமானம் மற்றும் கொடிமரத்துக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நல்ல நேரம் என்பதால் நேரத்துக்குள் மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரை வீரன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.எல்.ஏ.,க்கள், எம்பி., அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மலர்ந்த மத நல்லிணக்கம்
இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சேலம் கோட்டை ஜாமியா மஸ்ஜித் சார்பில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. மதங்களை கடந்து மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இஸ்லாமியர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே இன்று மாலை நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.