பாகற்காய், தேங்காய், பூசணிக்காய் இவற்றில் தீபமிட்டுகால சேத்திரபாலபுர கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த, காலபைரவர் ஆலயத்தில் கால பைரவருக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபமிட்டு வழிபாடு செய்தனர்.
பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்தகாசுரன் தேவர்களை மகரிஷிகளை மக்களை எல்லாம் துன்புறுத்தி இம்சித்து மகிழ்ந்தான். இவர்களைக் காக்க ஈசன் திருவுள்ளம் கொண்டார். அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அந்த மகா காலபைரவர் அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் காப்பாற்றினார்.
படைத்தல் தொழில் செய்வதால் மும்மூர்த்தியரிலும் தானே உயர்ந்தவர் என்ற கர்வம் பிரம்ம தேவனுக்கு உண்டாயிற்று. பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க ஈசன் தன் அம்சமாகத் தோன்றிய கால பைரவரைக் கொண்டு பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார் என்பது புராண வரலாறாகும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அதிலும் பைரவர் அவதரித்த தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்படும் என்பது மக்கள் நம்பிக்கை.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும். பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது.
அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், தேங்காய், பூசணிக்காய், பாவற்காய் இவற்றில் தீபமிட்டு, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து வழிபாடு நடத்தினர்.