ஒரே நேரத்தில் 300 நாதஸ்வர - தவில் வித்வான் கலைஞர்கள்! களைகட்டிய இசை கச்சேரி!
கரூர் நெரூர் அக்னீஸ்வரர் ஆண்டு விழாவில் நாதஸ்வரம், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பாடல்களை இசைத்தனர்.
கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ விழா நடைபெற்றது. இதில் 300 நாதஸ்வர கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்து அசத்தினர்.
கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திர நாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 15-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது. இதனையொட்டி அக்னீஸ்வரர் சுவாமிக்கு மங்கள இசையுடன் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நாதஸ்வரம், தவில், வீணை, வயலின், மிருதங்கம், மோர்சிங், தபேலா, லயம் குழுவினரின் நாத சங்கமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரவு நாதஸ்வரம், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பாடல்களை இசைத்தனர்.
இந்த இசை நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி காலை முதலே நெரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நெரூர் அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றம் செய்திருந்தனர்.