கரூர்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு ஆலயத்திற்கு கொண்டு வந்தார்.
கரூர் அருகே ஸ்ரீ சித்தநாதர் உடனுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெகதாபி கிராமத்தில் ஸ்ரீ சித்தநாதர் உடனுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு ஆலயத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பக்தர்கள் வழங்கிய பல்வேறு யாக மூலிகையால், முதல் காலையாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் காலையாக பூஜை, நான்காம் கால யாக விஜய் என நான்கு கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தினை சுற்றி வலம் வந்தனர். பின்னர், கோபுர கலசத்திற்கு நான்கு கால பூஜைகள் யாக வேள்விகள் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தின் சிறப்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோபுரத்திற்கு சந்தனப் பொட்டிட்டு, பட்டாடை உடுத்தி, மாலை அணிவித்த பிறகு மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.