Karthigai Deepam festival: காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடக்கம்...
திருவண்ணாமலை காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பிறகு மாதவிதியில் காமதேனு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றதால் பக்தர்கள் உற்சாகமாக சாமி தரிசனம் செய்தனர்
உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய விழாவாக வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெள்ளி ரதமும், டிசம்பர் மூன்றாம் தேதி மகாரத தேரோட்டமும் அதனை தொடர்ந்து டிசம்பர் 6-ஆம் தேதி அன்று அதிகாலை 4-மணியளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம்,வெளிநாடுகளில் இருந்து 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. தீபத் திருவிழாவின் தொடக்கமாக திருவண்ணாமலையின் நகர காவல் தெய்வமாக வணங்கக்கூடிய துர்க்கை அம்மன் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது. துர்க்கை அம்மன் ஆலயம் முன்பு எழுந்தருளி கூடியிருந்த ஏராளமான பக்தர்களுக்கு அருள் பாலித்த துர்க்கை அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே சாமி வீதியுலா நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதியில் துர்க்கை அம்மன் வீதி உலா வந்ததால் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்தோடு மாட வீதி முழுவதும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். துர்க்கை அம்மன் வீதியுலாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். Rasipalan November 25: தனுசுக்கு மதிப்பு கூடும்... சிம்மத்துக்கு தைரியம் தேவை.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!