Kandha Shasti Festival : இன்று சூரசம்ஹாரம் : திருச்செந்தூர், பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..! பாதுகாப்பு பணி தீவிரம்..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக இன்று நடைபெற இருக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூரபத்மனை தனது வேல் மூலம் முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. திருசெந்தூரை தொடர்ந்து பழனி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களிலும் இன்று சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது.
சூரசம்ஹாரம்:
முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும், புராண கதைப்படி திருச்செந்தூரே யுத்தம் நிகழ்ந்த தலம். இதனால் ஜெயந்திபுரம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்களில் சஷ்டி விரதம் இருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கோவில் வளாகங்களில் அலைகடலென பக்தர்கள் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் சேர்ந்த கிரி பிரகாரம் சுற்றி கோயிலை சேருகின்றனர். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹார விழா முடிந்ததும் விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
பழனியில் சூரசம்ஹாரம்:
பழனி முருகன் கோவிலில் கடந்த 25ம் தேதி கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் (ஞாயிற்றுக்கிழமை) இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சூரசம்ஹாரம் இன்று காலை 11.30 மணிக்கு மேல் பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- சூரசம்காரம் இன்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளாபூஜையும் நடைபெறும் என்றும், 11 மணியளவில் கட்டண பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, உச்சிகால பூஜை மற்றும் சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு 2.45 மணியளவில் கோவில் நடை அடைக்கப்படும் என்றும்,எனவே காலை 10 மணிக்கு மேல் ரோப்கார், மின்இழுவைரயில் ஆகிய சேவைகள் நிறுத்தப்படும் என்றும், படிவழியில் 11.30 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், சூரசம்ஹாரம் நிறைவடைந்து மறுநாள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.