Chennai Murugan Temples: அரோகரா! சென்னைவாசிகள் சென்று தரிசிக்க இத்தனை முருகன் கோயில்களா?
கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் சென்று தரிசிக்க எந்த முருகன் கோயில்களுக்கு செல்லலாம் என்பதை கீழே காணலாம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ததையே சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடலோரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் அன்றைய தினம் குவிவார்கள். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வசிப்பவர்கள் செல்வதற்கும் சென்னையில் ஏராளமான முருகன் கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களின் பட்டியலை கீழே காணலாம்.
-
வடபழனி முருகன் கோயில்:
சென்னையில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாக திகழ்வது வடபழனி முருகன் கோவில் ஆகும். 1890ம் ஆண்டு அண்ணாசாமி என்பவரால் கட்டப்பட்ட இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு சென்று முருகனை வணங்கினால் பல நன்மைகளை அடையலாம் என்பது ஐதீகம் ஆகும்
-
குன்றத்தூர் முருகன் கோயில்:
சென்னையில் உள்ள கோயில்களில் மற்றொரு புகழ்பெற்ற கோயில் குன்றத்தூர் முருகன் கோயில் ஆகும். திருப்போரூரில் வதம் முடிந்து திருத்தணி நோக்கிச் சென்ற முருகன் வழியில் இந்த குன்றின் மேல் இளைப்பாறிச் சென்றதால் இந்த கோயில் உருவானதாக புராணங்கள் கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும்.
-
அறுபடை வீடு முருகன் கோயில்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகிய அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் கட்டப்பட்ட கோயில்தான் அறுபடை வீடு முருகன் கோயில் ஆகும். சென்னை, பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா காலனியில் இந்த கோயில் அமைந்துள்ளது.
-
திருப்போரூர் கந்தசுவாமி கோவில்:
சென்னை புறநகரில் அமைந்துள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு சென்று முருகனை வணங்கினால் திருமணத் தடை, கடன் தொல்லை நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் குழந்தைப் பேறு அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மிக பழமையான இந்த கோயிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறுவாபுரி முருகன் கோயில்:
500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் சிறுவாபுரி முருகன் கோயில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு சென்று முருகனை வணங்கினால் உடலில் ஏற்பட்ட எந்த நோயும் குணமாகும் என்பது ஐதீகம் ஆகும். தீராத நோய்கள் தீர சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பலரும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குமரன் குன்றம்:
குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தில் உள்ள மலை மீது அமைந்துள்ளது குமரன் குன்றம் கோயில் ஆகும். சென்னை புறநகரில் அமைந்துள்ள இந்த குமரன்குன்றம் கோயில் மிகவும் ரம்மியான இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முருகப்பெருமான் மலை மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு சென்று முருகனை வணங்கிச் சென்றால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
-
சிவசுப்பிரமணிய கோயில்:
சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோயில் சிவசுப்பிரமணிய கோயில் ஆகும். இந்த கோயிலில் முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார். திருமணக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமானை இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
சென்னைவாசிகள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களிலும், சாதாரண நாட்களிலும் மேலே கூறிய முருகன் கோயில்களுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் ஏராளமான நன்மைகளும், பலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும். இந்த கோயில்கள் தவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்னைக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.