கல்லறை திருநாள்: விழுப்புரத்தில் கல்லறைகளில் பூக்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை
கல்லறைத் திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் பூக்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை
இறந்து போனவர்களின் ஆன்மாவிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம், சிறப்பு திருப்பலிகளில் பங்கேற்பதோடு, இறந்துபோன தனது உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து பிரார்த்தனை செய்வர்.
கல்லறைத் திருநாளை முன்னிட்டு விழுப்புரத்திலுள்ள கிறிஸ்தவ அரசர் கல்லறை தோட்டத்தில், திரளான கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறையில், வண்ண மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் நவம்பர் 2 ஆம் நாள் சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைபிடித்து வருகின்றனர் கிறிஸ்தவர்கள். இந்நிலையில், கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்படுவதால் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள கிறிஸ்தவ அரசர் கல்லறைத் தோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள், இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.
கல்லறையில் அஞ்சலி செலுத்த விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சகல ஆன்மாக்கள் நினைவு நாளை முன்னிட்டு கல்லறையில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர். கல்லறைத் தோட்டத்தில் இறந்த ஆன்மாக்கள் இளைப்பாறுதலுக்காக திருப்பலிகளும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. கல்லறை நாள் வழிப்பாட்டின் மூலம் முன்னோர்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிட்டும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும், கல்லறை திருவிழா குறித்து ஆரோக்கிய வனிதா மேரி கூறுகையில், “நான் நெய்வேலி இருந்து விழுப்புரம் வந்துள்ளேன். கல்லறைத் திருவிழா அனுசரிப்பது ஏன் என்றால், அனைத்து ஆன்மாக்களையும், மரியாதை செலுத்தி அவர்களுக்காக கடவுளிடம் வழிபடுவதே. இதுவே, கல்லறை திருவிழாவின் நோக்கம் ஆகும். மேலும், இந்த கல்லறை திருவிழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்றால், இறந்து போன அனைத்து ஆன்மாக்களையும் அவரவர் மனதில் ஞாபகப்படுத்த வேண்டும் என்பதே, கல்லறை திருவிழாவின் நோக்கமாகும். கடவுள் நம்முடன் இருப்பது போல நம் முன்னோர்களும் நம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக கல்லறை திருவிழா கொண்டாடப்படுகிறது" என கூறினார்