Vinayagar Chaturthi 2024: 30 நிமிடங்களில் 750 களிமண் விநாயகர் சிலைகளை தயாரித்து மாணவர்கள் சாதனை
விநாயகர் சதுர்த்தி விழாவில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 30 நிமிடத்தில் களிமண்ணை கொண்டு பல்வேறு வடிவிலான விதை விநாயகர் சிலைகளை வடிவமைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 750 களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை தயாரித்து மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பசுமை விதை விநாயகர் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு தமிழக முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 30 நிமிடத்தில் களிமண்ணை கொண்டு பல்வேறு வடிவிலான விதை விநாயகர் சிலைகளை வடிவமைத்தனர். தொடர்ந்து இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் வைத்து வழிபட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதோடு, மரம் வளர்ப்பதும் ஊக்குவிக்கப்படுவதாக மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், மாணவர்கள் இடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட வேண்டும் என்பதான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மரம் வளர்ப்பதில் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதைப்பந்துகளால் ஆன விநாயகர் சிலை இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வாங்குவதற்காக கடைவீதியில் திரண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு சேலம் மாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வாங்கிச் சென்று வருகின்றனர். குறிப்பாக சேலம் சின்ன கடைவீதி, முதல் அக்கிரகாரம், இரண்டாவதாக அக்கிரகாரம், வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலைகள், அருகம்புல், பூக்கள், பூஜை பொருட்களை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கீழ் 10 அடிக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதில் கரையக்கூடிய களிமண், காகிதக்குள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பூசப்படும் வண்ணங்கள் ரசாயன கலவைகள் இன்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதால் சேலம் மாநகரில் உள்ள சிறப்புமிக்க ராஜகணபதி திருக்கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை முதலில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இந்த விதம் அசும்பாவிதமும் ஏற்படாத வகையில் சேலம் மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.