திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயிலில் களைகட்டிய மாசி திருவிழா - ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயில் 15 நாள் திருவிழா நடந்து வருவதையொட்டி பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான மாசி பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழாவானது இந்த மாதம் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி வகையறாக்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.
இன்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது. பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் பூசாரிகள் இறங்க பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர். இதில் சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.
முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரதட்சனம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் விறகு கட்டைகளையும், உப்புமிளகு பொட்டலங்களையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். இன்று இரவு கோயிலிலிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இதில் சுமார் ஏராளமான பக்தர்கள் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.