இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இதன்படி பழைய புகைப்படங்களை இனி பயன்படுத்த முடியாது. விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த 'லைவ் போட்டோ', தேர்வு மையத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடப்படும்.

என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை, 2026ஆம் ஆண்டு முதல் நடைபெறும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Facial Recognition) மற்றும் 'லைவ் போட்டோ' (Live Photo) முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய நடைமுறை என்ன?
என்டிஏ அதிகாரிகளின் தகவல்படி, இனி வரும் காலங்களில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே இரண்டு கட்டச் சரிபார்ப்பு முறை அமலுக்கு வருகிறது.
- விண்ணப்பதாரர்கள் வழக்கம்போல சமீபத்திய ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தை (Scanned Photograph) பதிவேற்ற வேண்டும்.
- கூடுதலாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போதே வெப் கேமரா (Webcam) அல்லது மொபைல் போன் கேமரா மூலம் நேரடியாகத் தங்கள்புகைப்படத்தை ('Live Photo') எடுத்துப் பதிவேற்ற வேண்டும்.
லைவ் புகைப்படம்
இதன்படி பழைய புகைப்படங்களை இனி பயன்படுத்த முடியாது. விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த 'லைவ் போட்டோ', தேர்வு மையத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடப்படும். கண்கள் மற்றும் மூக்கின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட முக பயோமெட்ரிக் பரிசோதனையில் (Facial Biometric Verification), விண்ணப்பத்தில் உள்ள நபரும் தேர்வு எழுத வந்திருக்கும் நபரும் ஒருவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்.
ஜனவரி முதல் அமல்
இந்தத் திட்டம் வரும் ஜனவரி 2026-ல் நடைபெறவுள்ள ஜேஇஇ முதன்மைத் தேர்வில் (JEE-Main) முதன்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG) மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட் (CUET) உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது.

என்ன காரணம்?
கடந்த 2024 நீட் தேர்வில் எழுந்த வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டப் புகார்களைத் தொடர்ந்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தேர்வு நடைமுறைகளில் டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்கப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையிலும், டெல்லியில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் வெற்றியையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main 2026) வரும் ஜனவரி 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இப்புதிய பாதுகாப்பு முறை முழுமையாகக் கடைபிடிக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.






















