Hansika Next Movie: ஹன்சிகாவின் 51வது படத்தின் டைட்டில் 'மேன்'..! கம்பேக் தருமா க்ரைம் - த்ரில்லர்..?
Hansika Next Movie: பிரபல நடிகை ஹன்சிகாவின் 51ஆவது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடர் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கும் நடிகை ஹன்சிகா. ஆரம்ப காலங்களில் சில இந்தி படங்களில் நடித்த இவர், அது ஒர்க்-அவுட் ஆகாததால் அப்படியே கோலிவுட் பக்கம் வந்துவிட்டார்.
தமிழில் மான் கராத்தே, ஓகே ஓகே, அரண்மனை, சிங்கம் என இவர் நடித்த ஹிட் படங்கள் ஏராளம். முழுக்க முழுக்க பாலிவுட் திரையுலகை பின்புலமாக கொண்ட இவர், தமிழில் நடிக்க வந்து இன்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துவிட்டார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கிலும் நடித்துள்ள ஹன்சிகாவின் 51ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவின் 51ஆவது படம்:
”ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு” என்பதை மைய்யக்கருவாக வைத்து ஹன்சிகாவின் 51ஆவது படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, மேன் (Man) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஹன்சிகா ஹீரோயினாக நடித்து வெளியான மகா படமும் த்ரில்லர் பாணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை, மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயரிக்கிறது. கலாபக்காதலன், வந்தா மல போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய இயக்குனர் இகோர், ஹன்சிகாவின் 51ஆவது படத்தை இயக்குகிறார். படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சொதப்பலான 50ஆவது படம்:
அழகு ஹீரோயினாக விளங்கும் ஹன்சிகா, பெரும்பாலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற படங்களில் நடித்தது இல்லை. எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, ரோமியோ ஜூலியட் போன்ற ஜாலியான காதல் படங்களில் கதாநாயகியாகவே நடித்து வந்தார். இதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் அவர் தேர்ந்தெடுத்த கதைதான் மஹா.
முன்னர் போல் இல்லாமல், க்ரைம்-த்ரில்லர் கதையில் ஒரே நாயகியாக நடித்திருந்தார் ஹன்சிகா. ஆனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி, ரிலீஸான சிறிது நாட்களிலேயே சீட்டை காலி செய்தது. போதாக்குறைக்கு, இப்படத்தில் சிம்பு வேறு காமியோ ரோலில் நடித்திருந்தார். இருப்பினும், முன்னர் செய்த தவறை ஹன்சிகா மீண்டும் செய்ய மாட்டார் என்று ரசிகர்களின் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.