திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா; 3000 பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு
உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமியை தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தேர் பவனி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வழிநெடுக அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக அளித்தனர். திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோயில் மாசி திருவிழா சென்ற செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஞாயிற்றுக்கிழமை சாமி சாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. விழாவின் துவக்கமாக கோவில் வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலின் பூத்தேர் வீதி உலா நடந்ததுகோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பிய பூத்தேரில் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது.
Viral Video: நீ எப்படி இசையமைப்ப? - இமானுக்கு வித்யாசாகர் கேள்வி.. ரசிகர்கள் அதிர்ச்சி
தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கினர். விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்த தேர் முன்னே செல்ல பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து சென்றது. தேரின் முன்பு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். மேல தாளங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக சென்ற அம்மன் பூத்தேரினை காண்பதற்காக திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வானது இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கையில் குழந்தைகளோடும், வாயில் அழகு சுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் பூக்குழி இறங்கி கோட்டை மாரியம்மன் தரிசனம் செய்தனர். இந்நிகழ்விற்கு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.