சீர்காழி சட்டநாதர் கோயில் தோரணவாயில் அமைக்க அடிக்கல் நாட்டிய தருமபுரம் ஆதீனம்
சீர்காழி சட்டநாதர் கோயிலில் தோரணவாயில் அமைப்பதற்காக அடிக்கல்லை தருமபுரம் ஆதீனம் இன்று நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சட்டைநாதர் கோயிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து வருகின்ற மே மாதம் 24 -ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் செந்தில், வழக்கறிஞர் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தாளுநர் முரளி, திருமுல்லைவாசல் தொழிலதிபர் ஜிவிஎன் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஒன்றியம் மற்றும் மணல்மேடு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். பட்டவர்த்தி ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையின் தரத்தினையும், அண்ணா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்கால் தரத்தினையும், பட்டவர்த்தி அண்ணா நகரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.76 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமாணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாதம் ஒருமுறை மாவட்டத்திற்குச் சென்று அனைத்துத் துறை செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டு அதில் குறைகள் இருப்பின் அதை களைந்து, சிறப்பாக செயல்பட அறிவுரைகள் வழங்குவது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள்துறை போன்ற துறைகளின் மூலம் செயல் படுத்தப்படும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.