மேலும் அறிய
அரூர் அருகே காளியம்மன் கோவில் தேர் திருவிழா - பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அரூர் அருகே காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் 30 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா- பக்தர்கள் அழகு குத்தி, தீ மிதித்து நேர்த்திக்கடன்.

தீ மிதி திருவிழா
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் பழமையான காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் காளியம்மன், மாரியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். இதில் காளியம்மன், மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், கிடா வெட்டுதல், தீ மிதித்தல் உள்ளிட்ட 3 நாள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது. இதில் விழாவில் முக்கிய நாளான இன்று தீ மிதித்தல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் காளியம்மன், மாரியம்மன் கோயில் பூசாரிகள் சென்னகிருஷ்ணன், கோவிந்தசாமி தலைமையில், கடந்த 11 நாட்களாக 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பக்தர்களுக்கு பம்பை உடுக்கை முழக்கத்துடன் சக்தி அழைத்து, பூக்கூடை, பூங்கரகம், தீச்சட்டி எடுத்தனர். சிலர் தாழ் அழகு, முதுகில் 6 கத்திகளை போட்டுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காளியம்மன் கோயில் அருகே 23 அடியில் நீளத்தில் மூட்டப்பட்டிருந்த தீயில் அனைத்து பக்தர்களும் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மேலும் காளியம்மன் வாரத்தில் பெற்ற குழந்தைகளை சிலர் கையில் ஏந்தி கொண்டு தீ மிதித்தனார். அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதற்காக சில பக்தர்கள் தங்களது குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தீ மிதித்தனர். அப்பொழுது உடலில் தீய சக்திகள் இருக்கும் பெண்கள் ஆண்கள் என தீ மிதித்து வருபவர்கள் நடக்கின்ற பாதையில் படுத்திருந்தனர். இதில் கெட்ட சக்தி இருப்பவர்கள் மீது தீ மிதித்து வரும் பக்தர்கள் மிதித்து விட்டு சென்றனர். மேலும் தீ மிதித்து வருவார்கள் பூ கூடையில் எடுத்து வந்த பூ, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை பின்பக்கம் வீசும் பொழுது, குழந்தை உள்ளிட்ட பல்வேறு வரங்களை கேட்கும் பெண்கள் கூட்டமாக நின்று, முந்தானையில் பிடித்து சென்றனர்.
அதேபோல் சில பெண்கள் தீ மிதித்து வருபவர்களின் முன் மண்டியிட்டு தங்களின் கஷ்டங்களை தெரிவித்து, பரிகாரங்களை பெற்று சென்றனர். இந்த தேர் திருவிழா மற்றும் தீ மிதி திருவிழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தீ மிதி திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















