Avani Avittam 2023: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் புதிய பூணூல் அணியும் நிகழ்வு - திரளானோர் பங்கேற்பு
ஆவணி அவிட்டம் விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் 200க்கும் மேற்பட்டோர் புதிய பூணூல் அணிந்தனர்.
விழுப்புரத்தில் ஆவணி அவிட்டம் விழாவை முன்னிட்டு ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில், விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் புதிய பூணூல் அணிந்தனர்.
விழுப்புரம் திருவிக வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் 200 க்கும் மேற்பட்டோர் பூணூல் அணியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆவணி அவிட்டம் விழாவில் முக்கிய நிகழ்ச்சி பூணூல் மாற்றும் நிகழ்வாகும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
அதன்படி, விழுப்புரம் திரு.வி.க வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில், விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் புதிய பூணூல் அணியும் சடங்கினை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. “உபகர்மா” என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது.
ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி அவிட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி புதன்கிழமை வந்துள்ளது.
ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவமாக, ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்று நான்கு வேதங்கள் உள்ளன. அசுரர்களால் வேதங்கள் திருடப்பட்டு, யாராலும் மீட்க முடியவில்லை. எனவே மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ஆவணி அவிட்ட நாள் அன்று தான் வேதங்களை படிக்கத் துவங்குவார்கள். இது உபகர்மா என்று கூறப்படுகிறது. இது பிராமண சமூகத்தில் மிகவும் முக்கியமான ஒரு நாள் மற்றும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகில் தான் மந்திரங்கள் ஜபித்து, பூணூல் மாற்றிக் கொள்வார்கள். அப்படி இல்லை என்றால் கோவிலில் ஒரு குழுவாக அமர்ந்து புரோகிதரை வரவழைத்து செய்யலாம். பூணூல் அணிந்து கொண்ட பின்னர், தினமும் மந்திரங்கள் சொல்லி ‘சந்தியா வந்தனம்’ பாராயணம் செய்யும் வழக்கமும் உள்ளது. அதன் பிறகு, வீட்டில் மற்றவர்களோடு இணைந்து கொண்டாடும் முதல் ஆவணி அவிட்டம், ‘தலை ஆவணி அவிட்டம்’ என்று கூறப்படுகிறது.
அதே போல, திருமணமானவர்களுக்கு, பூணூல் அணியும் பழக்கம் உள்ள அனைத்து சமூகத்திலும், திருமணம் ஆன பிறகு வரும் முதல் ஆவணி அவிட்டம், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவினி அவிட்டம் திருநாள் பல்வேறு மாவட்டங்களில் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதுபோல விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.