Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? அறிவிப்பை வெளியிட்ட கோயில் நிர்வாகம்..
நாளை புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேவரர் கோயில். இந்த கோயிலுக்கு பின் இருக்கும் மலையையே சிவனாக வழிபடுவார்கள். இதனால் இந்த மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதிலும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் அந்த நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி நாளை மாலை 6.49 மணிக்கு தொடங்குகிறது. நாளை தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை 4.34 மணி நிறைவடைகிறது. நாளை இரவு முதல் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிலா-டி-நபி என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான மக்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம், அம்மணிஅம்மன் கோபுரம், பேகோபுரம், திருமஞ்சன கோபுரம், ஆகிய நான்கு கோபுர நுழைவாயிலிலும் இந்து சமய அறநிலையத்தின் அலுவலர்கள் மற்றும் தன்னார்வர்லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் அவ்வப்போது பல்வேறு குற்ற (பக்தர்களிடம் வழிபறி) செயல்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து 8 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் நடைபெறும் குற்றச்செயலை கண்காணித்து தடுக்க, காவல் துறை அறிவுரையின்பேரில் இந்து சமய அறநிலையத் துறை (கோயில் நிர்வாகம்) சார்பில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

