Avani Sunday: 'சிவன், விஷ்ணு, பிரம்மா..' : ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இத்தனை ஸ்பெஷலா?!
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்மூர்த்திகளையும், சூரிய பகவானையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் எந்த சுபகாரியங்களையும் நடத்தாமல் காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு இன்பமான நிகழ்வாக ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. ஆடி மாதத்தை போலவே ஆவணி மாதமும் மிகவும் சிறப்பான மாதம் ஆகும்.
மலையாள மக்களின் புகழ்பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆவணி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் எவ்வாறு செவ்வாய், வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளோ அதேபோல ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
ஆவணி ஞாயிறு:
இந்த ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரையும், சூரியபகவானையும் வணங்கினால் எண்ணிலடங்கா இன்பங்களை பெறலாம். ஆவணி மாதத்திற்கு முந்தைய மாதமான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆவணி மாதத்திற்கு பிந்தைய மாதமான புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும்.
ஆவணி மாதமானது சைவ, வைணவ பாகுபாடின்றி அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதம் ஆகும். சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் உகந்த மாதமாக ஆவணி உள்ளது. இந்த மாதத்தில் விநாயகர், முருகன், அம்மன் என அனைத்து தெய்வங்களின் சன்னதிகளிலும் சுபகாரியங்களும், பக்தர்கள் கூட்டமும் எப்போதும் காணப்படும்.
மும்மூர்த்திகள், சூரிய பகவான்:
அப்பேற்பட்ட சிறப்புகள் வாய்ந்த இந்த ஆவணி மாதத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வணங்கி, சூரிய பகவானையும் வணங்க வேண்டும். அந்த நாட்களில் காலையிலே எழுந்து குளித்து நீராடிவிட்டு மும்மூர்த்திகளையும் வணங்க வேண்டும்.
பலன்கள்:
இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் வீட்டில் நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கி ஒற்றுமை ஏற்படும். இந்த நாளில் பெருமாளை வணங்கினால் செல்வ கடாட்ஷம் பெற்று சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் படைப்பு கடவுளான பிரம்மாவை வணங்கினால் பெரும் சிறப்பு உண்டாகும்.
இந்த மூன்று தெய்வங்களையும் வணங்குவதற்கு முன்பு, காலையில் குளித்தவுடன் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும். இந்த ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன், பெருமாள், பிரம்மா மற்றும் சூர்யபகவானை வணங்கினால் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.
மேலும் படிக்க: Onam 2023: 10 நாட்கள் களைகட்டும் ஓணம் திருவிழா.. எந்தெந்த நாள் என்னென்ன சிறப்பு? ஓர் பார்வை..
மேலும் படிக்க: Somavaram: சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம்.. விரதம் இருப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..?