எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
தென்கொரியாவில் வெடித்து சிதறிய விமானத்தில் மொத்தம் 179 பேர் தற்போது வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தென்கொரியா முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகரத்திற்கு போயிங் 737-800 பயணிகள் விமானம் இந்திய நேரப்படி இன்று காலை ஒன்று சென்றது.
179 பேர் உயிரிழப்பு:
ஆனால், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து விலகி, விமான நிலையச் சுற்றுச்சுவரில் இடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் பெரும் சாேகத்தை தென்கொரியா முழுவதும் ஏற்படுத்தியது.
175 பயணிகள், விமானக்குழுவினர் 6 பேர் என மொத்தமாக 181 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர். முதற்கட்ட தகவலில் 28 பேர் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தென்கொரியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீக்கிரையான விமானம்:
விமானம் சம்பவ இடத்திலே வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த அனைவரும் தீக்கிரையாகினர். தீயில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கவலைக்கிடமான நிலையில் பலரும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும், அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவின் செய்தி நிறுவனமான யான்கோப் வெளியிட்ட தகவலின்படி, விமானம் தரையிறங்கும்போது தரையிறங்குவதற்கான கியர் வேலைசெய்யவில்லை என்றும், அதன் காரணமாகவே விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி சுற்றுச்சுவரில் மோதி வெடித்துச் சிதறியது என்றும் தெரிவித்துள்ளது.
சோகத்தில் மூழ்கிய தென்கொரியா:
புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், 175 பேரை முவான் விமான நிலையம் காவு வாங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமே 181 பேர் பயணித்த விமானத்தில் தற்போது வரை 179 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய இரண்டு பேரும் கவலைக்கிடமாகவே இருக்கின்றனர்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவை நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை தவறுதலாக ரஷ்யாவின் ட்ரோன் சுட்டு வீழ்த்தியதில் ஏராளமோனார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.