Somavaram: சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம்.. விரதம் இருப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..?
சிவபெருமானை வணங்கி ஆண்கள் சோமவார விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமைவார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆடி மாதம் முடிந்து சிறப்பு வாய்ந்து ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதம் தொட்டு மக்கள் பலரும் சுப நிகழ்ச்சிகளை நடத்திட ஆர்வமாய் இருப்பார்கள். அந்தளவு சிறப்பு வாய்ந்த மாதமாக ஆவணி மாதம் உள்ளது.
சோமவாரம்:
சிவபெருமான் ஆலகாஷ விஷத்தை அருந்தி திருநீலகண்டர் அவதாரம் எடுத்தது, மகாபலி மன்னன் வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் அளித்தது, மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளை கொண்டு வந்தது என்று பல நம்பிக்கைகளை கொண்டது இந்த ஆவணி மாதம் ஆகும். ஆடி மாதத்தை போலவே ஆவணி மாதத்திலும் பல சிறப்பு வாய்ந்த நாட்கள் உள்ளன.
ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிக உகந்த மாதம் என்பது ஐதீகம். திங்கள்கிழமையே சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. பார்வதியோடு சேர்ந்து காட்சி தரும் சிவபெருமானையே சோமன் என்று அழைக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதியான சிவ பெருமானை வணங்கி அவரை நினைத்து திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பதையே சோமவார விரதம் என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த ஆவணி மாதத்தில் அவரை நினைத்து சோமவார விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு என நம்பப்படுகிறது.
பலன்கள்:
குறிப்பாக, இன்றைய காலத்தில் திருமணம் நடக்காமல் பல ஆண்களும் தவித்து வருகின்றனர். சரியான வரன் அமையாதது,வரன் அமைந்தாலும் ஜாதகப் பொருத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமண யோகம் கைகூடாமல் இருக்கலாம். அந்த சிரமங்களை சந்திக்கும் ஆண்கள் இந்த ஆவணி மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து ஓம் நமசிவாய நாமத்தை சொல்லி சோமவார விரதம் இருந்தால் நல்ல வாழ்க்கை துணைவி அமைவார் என நம்பப்படுகிறது
சோமவார நாளில் சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது இன்னும் சிறப்பு ஆகும். உங்கள் வீட்டு அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு ஆகும். இதனால் குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்கு நல்ல கல்விச்செல்வம் உண்டாகும். நோய்வாய்பட்டவர்கள் உடல்நலன் தேறுவார்கள் என நம்பிக்கை நிலவுகிறது.
நமச்சிவாய நாமம்:
சோமவார விரதத்தை 12 ஆண்டுகள் வரை கூட கடைபிடிக்கலாம். உடல்நலக்குறைவாக இருப்பவர்கள் கட்டாயம் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் மனமுருகி ஓம் நமச்சிவாயா என்று சிவபெருமானின் நாமத்தை சொல்லி வழிபட்டாலே துயரங்கள் நீங்கும். பொதுவாக சோமவார விரதம் கார்த்திகை மாதத்தில்தான் பக்தர்கள் இருப்பார்கள்.
ஆனால், சிவபெருமானுக்கு ஆவணி மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதால் இந்த மாதத்திலும் பக்தர்கள் சோமவார விரதம் மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க: Thoothukudi: கடைசி வரை இந்த ஆட்சி குழப்பத்தில்தான் போகும்.. அரிவாள் மீதேறி அருள்வாக்கு சொன்ன சாமியார்!
மேலும் படிக்க: Thiruvannamalai: கிரிவலப்பாதையில் அசைவ உணவுகள் சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் - ஆளுநருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி