Aadi Sevvai Viratham: ஆடி செவ்வாய் விரதம்.. என்னென்ன பலன்களெல்லாம் கிடைக்கும்? பக்தர்கள் நற்சொல்..
Aadi Sevvai Viratham in Tamil: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அம்மனை (பெண் தெய்வத்தை) வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் எண்ணில் அடங்காதவை ஆகும்.
Aadi Sevvai Viratham: வாரத்தின் ஏழு நாட்களில் ஆன்மீக மனம் மணக்கும் நாள் எதுவென்றால் கட்டாயம் செவ்வாயும், வெள்ளியும். அப்பேற்பட்ட செவ்வாய் கிழமைகளில் ஆலய வழிபாடு மேற்கொள்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதுவும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை என்பது மிகமிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அம்மனை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பல.
நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் 17-ஆம் தேதி பிறக்கிறது. ஆடிபிறக்க உள்ளதால் இப்போது முதல் மக்கள் ஆடி மாத கொண்டாட்டத்திற்கு தயாராக உள்ளனர்.
பூஜை செய்வது எப்படி?
ஆடி செவ்வாய் கிழமைகளில் காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். பின்னர், பூஜையறையை நன்றாக நீரால் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஆடி செவ்வாய் தினத்தன்று வீட்டின் பூஜையறையில் 2 குத்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
குல தெய்வத்தை வணங்கிய பிறகு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வணங்கி விரதம் இருக்க வேண்டும். விரதத்தை முழு மனதோடு கடைபிடிக்க வேண்டும். விரதம் இருக்க இயலாத உடல்நிலை குன்றியவர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆடி செவ்வாய்கிழமைகளின் மாலை வேளைகளில் அம்பிகைக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒரு இனிப்பை செய்து நைவேத்தியம் செய்யலாம்.
வாழை அல்லது வெற்றிலையில் அம்பிகை நாமத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
ஆடி செவ்வாய் கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு விரதம் இருந்து வழிபடுதல், அம்மனுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
என்ன பலன்கள்?
ஆடி செவ்வாய்கிழமைகளில் அம்மனை வணங்கி இந்த பூஜை செய்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி வரன்கள் வாயில் வந்து நிற்கும். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆரோக்கிய குறைபாடு இருந்தவர்களுக்கு உடல்நலம் மேம்படும்.
சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் வலுப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து நன்மைகள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு செல்வ செழிப்பு உண்டாகும்.
ஜாதகத்தில் செவ்வாய்தோஷம், நாக தோஷம், ராகு தோஷம் என எந்த தோஷம் இருப்பவர்களும் இந்த பூஜையை செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடை நீங்கும். ஆடி செவ்வாயில் செய்யும் பூஜை காரணமாக ஆடியில் நாம் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது ஐதீகம். நீங்களும் ஆடி செவ்வாயில் துர்கை அம்மனை வணங்கி பூஜை செய்து ஏராளமான பலன்களை அடையுங்கள்.
மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!
மேலும் படிக்க: திருமணத்தடை நீங்க ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள்; சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு