Aadi Sevvai 2023: தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு - சக்தி மாத வழிபாடும் விரத முறைகளும்!
Aadi Sevvai 2023: ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு செழிக்கும். அனைவருக்கும் நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
Aadi Sevvai Viratham: தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி என்றாலே தெய் வழிபாடுகளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய் இரண்டுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க நாட்களில் அம்மனை வழிபட்டால் நினைத்தவைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் அம்மனை வழிப்படுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஆடி மாதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்த மாதம்.
அம்மன், ஒவ்வொரு ரூபமாக இருப்பவள். எனவே, உமையவளாகவும், மாரியம்மன், மகமாயி, கருமாரியம்மன், முத்து மாரியம்மன், செல்லியம்மன், துர்கையம்மன், வாராஹியம்மன் என திகழும் அம்பிகையின் சொரூபங்களை வழிபடுவது நல்லது. ஆடி மாதத்தில்தான் அம்பிகைக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில்தான் ஆண்டாள் அவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஏன் ஆடி செவ்வாய் வழிபாடு சிறப்பு - செவ்வாய் பிள்ளையார் பூஜை
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு செழிக்கும். அனைவருக்கும் நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
பெண்கள் பலர் ஒன்றுகூடி வீடுகளில் மாலை நேரங்களில் பூஜை செய்வர். அம்மனுக்கு கொழுக்கட்டை படைப்பார்கள். இந்த பூஜையை காலங்காலமாய் விரதம் மேற்கொண்டு பூஜை செய்வது முன்னோர்களின் ஐதீகம். ஆடி மாதம் அம்மன் தவம் செய்த மாதமாக சொல்லப்படுகிறது. அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்தக் கொழுக்கட்டை செய்வதை ஆண்கள் பார்க்கக்கூடாது என்றும் அதனை மீறி பார்த்தால் தடங்கல் ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது. இதனால் செவ்வாய் கிழமை பூஜைகளில் பெண்கள் மட்டுமே பங்கேற்பர்.
வயதில் மூத்த பெண்கள், அதாவது அனுபவம் உள்ள பெண்கள் இந்த பூஜையின்போது கடவுளை நன்றாக வேண்டி மஞ்சள் தூள் பயன்படுத்தி தேங்காயில் வைத்து அம்மனின் முகத்தோற்றம் வரும்படி அலங்கரிப்பார்கள். அம்மனின் முகத்தில் கண்மை, பொட்டு, பூ உள்ளிட்டவைகள் வைத்து அலங்கரிப்பர். அம்மனின் உருவத்திற்கு முன்பு புங்கை, புளியமர இலைகளை வைத்து விளக்கேற்றி உப்பு சேர்க்காத மாவில் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைப்பார்கள்.
இந்த சிறப்பு வழிப்பாட்டின்போது ஒரு கதையும் சொல்வார்கள். பெண்கள் நல்மனதுட்ன ஒன்றுகூடி அம்மனை மனதார நினைத்து பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்று நம்பிக்கையில் இந்த பூஜை செய்யப்படும். இந்த சிறப்பு பூஜையை ஆடி, தை, மாசி ஆகிய மூன்று மாதங்களில் வரும் செவ்வாய் கிழமை தோறும் செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பூஜையில், கொழுக்கட்டையில் உப்பு சேர்க்க மாட்டார்கள் என்பதே சிறப்பு.
ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்
பெண் தெய்வங்களுக்கு உரிய ஆடி மாதத்தில், பல்வேறு இடங்களில் வேப்பிலையின் மணம் கமழும். மஞ்சள் கமகமக்கும். பொங்கல் படையலிடுவார்கள். கூழ் வழங்குவார்கள்.
விரத முறைகள்:
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால், வீட்டில் நல்லது நடக்கும். செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த பூஜை செய்யலாம் என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விளக்கேற்றும் முறை
இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைக்கலாம். சாம்பிராணி பயன்படுத்தி பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். குல தெய்வத்தை வழிபடலாம்.
ஆடி செவ்வாய் கிழமைகளில் உண்ணா விரதமும் இருக்கலாம். மாலை நேரங்களில் அம்மனை வழிபட்டு பாயசம், கேசரி அல்லது முடிவந்த உணவுகளை சமைத்து படைக்கலாம். பூஜை செய்ய வேண்டும்.