Aadi Perukku 2024: குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் ஆடி பெருக்கை கொண்டாட பொதுமக்களுக்கு தடை
Aadi Perukku 2024: காவிரி ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டதால் புதுமணத் தம்பதியினர் தங்களது கல்யாண மாலைகளை பாசன வாய்க்காலில் விட்டனர்.
குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் அதிக அளவு வெள்ள உபரி நீர் வருவதால் ஆடி பெருக்கை கொண்டாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் ஆடிப்பெருக்கினை பொதுமக்கள் கொண்டாடினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கனஅடி வெள்ள உபரி நீர் வருவதால் காவிரி கரையோரப் பகுதியில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என்று பொதுமக்கள் நீராடவோ, கால்நடைகளை குளிப்பாட்டில் மீன் பிடிக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்காமல் இருப்பதற்காக வருவாய் துறையினால் காவல்துறையின் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கரைகளில் தடுப்புகள் அமைத்தும் பொதுமக்கள் இறங்காத வண்ணம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஆடிப்பெருக்கினை முன்னிட்டு புதுமணத் தம்பதிகள் மற்றும் காவிரித்தாயை வழிபட ஆற்றிற்கு வந்தனர். ஆனால் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அனைவரையும் திரும்பி செல்ல அறிவுறுத்தினார்.
குளித்தலை அருகே மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பொதுமக்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசிதி பெற்ற இக்கோவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பலருக்கும் குடிப்பாட்டு கோவிலாகவும் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது.
ஆடிப்பெருக்கு அன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் பலரும் இங்கு வந்து அம்மனுக்கு பொங்கல் படையில் இட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆடி 18 அன்று செல்லாண்டியம்மன் மற்றும் பொன்னர், சங்கர் ஆகிய தெய்வங்களை வழிபடும் பொதுமக்கள் சுவாமி உற்சவர்கள் மற்றும் வேல், காவடி ஆகியவற்றை எடுத்து வந்து சிறப்பு அலங்காரங்கள் செய்தும் அம்மனுக்கு படையல் இட்டு வழிபாடு செய்து மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பினர்.
மாயனூர் காவிரி ஆற்றில் அதிகளவு நீர்வரத்து உள்ளதால் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் ஆற்றுக்கு சொல்லும் பாதையினை மாவட்ட நிர்வாகம் தகரத்தை வைத்து அடித்தும் மாயனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். அதிகளவு வெள்ள உபரி நீர் வருவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் அருகில் உள்ள கோவில் மற்றும் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் அரிசி படையல் இட்டு சுமங்கலி பெண்கள் தங்கள் தாலியினை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
பூஜை செய்த பின் புதிய மஞ்சள் கயிறை புதுமணத் தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் புது தாலி கயிறையும் மாற்றிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடம்பர் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். காவிரி ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டதால் புதுமணத் தம்பதியினர் தங்களது கல்யாண மாலைகளை பாசன வாய்க்காலில் விட்டனர்.