Aadi Festival: கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா - அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சேலம் அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில்களில் பூமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சேலம் கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஒன்றாகும். இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டிக்கும் தலைமை கோவிலாக கருதப்படும் இந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் செல்வர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆடித் திருவிழா விமர்சியாக கொண்டாட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் விரைந்து முடித்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வழக்கம் போல இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை 23ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் தொடங்கிய திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் உருளுதண்டம் எனக் கூறும் அங்க பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு கொட்டும் மழையின் பொருட்படுத்தாமல் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவு ஏந்தியும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் உருளுதண்டம் என்று கூறப்படும் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர். அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கோவில் வளாகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில்களில் பூமிதி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி முழக்கங்கள் முழங்க பூ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல் மஹா காளியம்மன் திருக்கோவிலில் ஆடி பண்டிகை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காளியம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் மற்றும் கோவில் முழுவதும் வளையல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன. இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களிலும் ஆடிப் பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம் மாநகர காவல் துறை சார்பில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களாக மட்டுமின்றி மாநகர் பகுதி முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.