Aadi Festival 2023: ஆடி வெள்ளி: சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு வளையல், வெற்றிலையால் சிறப்பு அலங்காரம்
அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் வளையல்கள் வைத்து வழிபாடு நடத்திய பக்தர்களின் வளையல்கள் அனைத்து வளையலகளையும் ஒன்று சேர்த்து ஒரு லட்சத்து 8 வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடிமாதத்தில் அம்மன் திருக்கோவில்களின் சிறப்பு பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்து வருகிறார். அதிலும், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வளையல் வைத்து வழிபாடு நடத்தினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஒரு ஆண்டு முழுவதும் மாரியம்மனுக்கு வைத்து வழிபட்ட வளையல்களை அனைத்தையும் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலில் வளையல்கள் வைத்து வழிபாடு நடத்திய பக்தர்களின் வளையல்கள் அனைத்து வளையலகளையும் ஒன்று சேர்த்து ஒரு லட்சத்து 8 வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் மாரியம்மன் வண்ணங்கள் நிறைந்து கம்பீரமாக காட்சியளித்தார். இந்த சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் அம்மனை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர் வழிபட்டு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் அலங்காரம் செய்யப்பட்ட வளையல்களை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் கோவில் முழுவதும் வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு பக்தர்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
இதேபோன்று சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள கொடம்பைக்காடு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு காளியம்மனுக்கு 10,008 வெற்றிலை பாக்குகள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து மகா காளியம்மனை வழிபட்டு சென்றனர். கோவிலுக்கு வந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெற்றிலை மற்றும் வாக்கு அபிஷேகம் செய்து வழங்கப்பட்டது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி சென்றனர்.
இதேபோல வின்சென்ட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் திருக்கோவிலில் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க கவசத்தை கொண்டு அம்மனுக்கு சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. இதே போல பெரிய எல்லைப்பிடாரி கருவறை அம்மனுக்கு முத்துக்களால் ஆன அங்கியை கொண்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மந்திரங்கள் ஓத அர்ச்சனைகள் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, தங்க கவசத்திலும் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த எல்லைப்பிடாரி அம்மனை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் அம்மன் திருக்கோவில்களை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. குறிப்பாக மணியனூர் காளியம்மன் திருக்கோவிலில ஆயிரம் கண் அலங்காரம் செய்திருந்தனர். மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் திருக்கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.