Zimbabwe Drought:200 யானைகளை கொல்லப்போவதாக ஜிம்பாப்வே அரசே அறிவிப்பு: அதிர்ச்சியளிக்கும் காரணம்..!
Zimbabwe Drought 2024 Update: பசி பட்டினி காரணமாக 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக அளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Zimbabwe Drought:200 யானைகளை கொல்லப்போவதாக ஜிம்பாப்வே அரசே அறிவிப்பு: அதிர்ச்சியளிக்கும் காரணம்..! Zimbabwe to kill 200 elephants to feed people left hungry by drought due weather l Nino Zimbabwe Drought:200 யானைகளை கொல்லப்போவதாக ஜிம்பாப்வே அரசே அறிவிப்பு: அதிர்ச்சியளிக்கும் காரணம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/619ac3d1abaa3967263d30a23eaa9f911726656853621572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Zimbabwe to kill 200 elephants: மக்களின் உணவு பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், யானைகளை கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு கொடுக்க உள்ளதாக ஜிம்பாப்வே நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாம் யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்நிலையில் ஜிம்பாப்வே அரசாங்கம் என்ன சொல்கிறது , அங்கு என்ன நடக்கிறது என பார்ப்போம்.
ஜிம்பப்வே வறட்சி:
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் , தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், அங்கு உணவுப்பற்றாக்குறையானது மிகவும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மக்கள் உணவு பற்றாக்குறையால் , மக்கள் கடுமையான பசி பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர்.
எல்நினோவால், ஆப்பிரிக்கா கண்டத்தில் மழை குறைந்து மிகவும் வறட்சி ஏற்பட்டது. இதனால் உணவுப் பயிர்கள் வறட்சியால் வளரவில்லை. இது அந்த பிராந்தியம் முழுவதும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
200 யானைகள் கொல்ல திட்டம்:
இதனால் அங்கு வாழும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வே வன அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், “ ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய ஐந்து தென்னாப்பிரிக்க நாடுகளில் பரவியுள்ள ஒரு பாதுகாப்புப் பகுதியில் 200,000 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது - இப்பகுதிதான் உலகளவில் மிகப்பெரிய யானை மக்கள் வசிக்கும் இடமாக இருக்கிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட ஜிம்பாப்வேயில் உள்ள மக்களுக்கு யானைகளை கொன்று இறைச்சி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது . அண்டை நாடான நமீபியா கடந்த மாதம் 83 யானைகளை கொன்று, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சியை விநியோகிக்க முடிவு செய்தது.
”யானைகள் அதிகமுள்ளது “
"வறட்சியை எதிர்கொள்ளும் பூங்காக்களில் நெரிசலைக் குறைக்க இது ஒரு முயற்சியாகவும் நாங்கள் பார்க்கிறோம். இங்கு 84,000 யானைகள் உள்ளன. அது இருக்கும் அளாவானது மிகப் பெரியது. 55,000 யானைகளை மட்டுமே தாங்கக்கூடிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கும் நாட்டின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, யானைகள் கொலையும் இருப்பதாக” வன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதனால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் யானைகள் தாக்கியதில் 50 பேர் உயிரிழந்தனர். இத்தகைய கடுமையான வறட்சியால், வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளோம் எனவும் வன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இதற்கு ஐ. நா உள்ளிட்ட அமைப்புகள் என்ன தெரிவிக்க போகின்றன என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)