Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சர்ச்சைக்குரிய விஷயங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டங்களை உக்ரைன் முழுமையாக ஏற்காததால், அத்திட்டம் திருத்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடைபெற்றுது. இந்நிலையில், திருத்தப்பட்ட அமைதித் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களை, ட்ரம்ப்புடன் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் முன்மொழிந்த திட்டம் - வேதனை அடைந்த ஜெலன்ஸ்கி - திருத்தப்பட்ட திட்டம்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, 28 அம்சங்களை கொண்ட அமைதி திட்டம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை நவம்பர் 27-ம் தேதிக்குள் ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் அந்நாட்டிற்கு வழங்கிவரும் சில விஷயங்களை நிறுத்தப் போவதாக அச்சுறுத்தவும் செய்தார்.
இந்நிலையில், ட்ரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டம், ரஷ்யாவிற்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இதனால், அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, அதனடிப்படையில் அமைதி திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
திருத்தப்பட்ட திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி
இந்த சூழலில், அமைதித் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட அம்சங்கள் ரஷ்யாவுடனான போரை நிறுத்துவதற்கான மிக ஆழமான ஒப்பந்தம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், போரை நிறுத்துவதற்கான ஆழமான ஒப்பந்தங்களாக விரிவுபடுத்த முடியும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் அதிபர் ட்ரம்பிடம் இன்னும் தீவிர ஒத்துழைப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் பலத்திற்கேற்ப ரஷ்யா செயல்பட்டு வருவதாகவும், அமைதித் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து அதிபர் ட்ரம்புடன் ஆலோசனை நடத்த தயாராக உள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் பற்றிய பாதுகாப்பு முடிவுகள் உக்ரைனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஐரோப்பா பற்றிய பாதுகாப்பு முடிவுகள் ஐரோப்பாவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏனென்றால், ஒரு நாடு அல்லது அதன் மக்களின் முதுகுக்குப் பின்னால் ஏதாவது முடிவு செய்யப்பட்டால், அது செயல்படாமல் போகும் அபாயம் எப்போதும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், இந்த அமைதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.





















