2021ம் ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் கொலை : மூன்றாவது இடத்தில் இந்தியா! ஷாக் ரிப்போர்ட்!
பெல்ஜியத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகளவில் கடந்தாண்டு 45 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறை சம்பவங்களையும், ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் அவதிப்படும் மக்களின் இன்னல்கள் உள்பட சாமானியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளி உலகிற்கும், அந்தந்த அரசாங்கங்களுக்கும் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. மிகப்பெரிய விவகாரங்களை தைரியமாக வெளியில் கொண்டு வரும்போது அவர்களின் உயிர்களுக்க பேராபத்தாக முடிகிறது.
இந்த நிலையில், இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ஜார்னலிஸ்ட்ஸ் ( ஐ.எப்.ஜே) எனப்படும் சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு மட்டும் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்சை அடிப்படையாக கொண்ட சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையில், கடந்தாண்டு அதிகளவில் பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் மட்டும் 9 பத்திரிகையாளர்கள் கடந்தாண்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ நாட்டில் 8 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு 4 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் பார்க்கும்போது, ஆசிய – பசிபிக் மண்டலத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்த மண்டலத்தில் 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10 பத்திரிகையாளர்கள், ஆப்பிரிக்காவில் 8 பத்திரிகையாளர்கள், ஐரோப்பியாவில் 6 பத்திரிகையாளர்கள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றம் ஆப்பிரிக்க நாடுகளில் தலா ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பத்திரிகையாளர்கள் அவரவர் சமூகத்தில், நகரங்கள் மற்றும் அவர்களது நாட்டில் நிகழ்ந்த ஊழல், குற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, அந்த நாட்டில் இருந்து உலகளாவில் பிரபலமான ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1995ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டில்தான் பத்திரிகையாளர்கள கொலைகள் குறைவு என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ICC 2021 Review: ”மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்கள்” - உணர்ச்சி பொங்க ஐசிசி பகிர்ந்த பதிவு