(Source: ECI/ABP News/ABP Majha)
Corona : கொரோனா முதன்முதலில் பதிவான வூகானில் மீண்டும் ஊரடங்கு...! என்ன நடக்கிறது சீனாவில்..?
சீனாவில் வூகான் உள்பட நாடு முழுவதும் 12 நகரங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று கடந்த 2020ம் ஆண்டிலிருந்து உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில், சீனாவில் வூகான் உள்பட நாடு முழுவதும் 12 நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலில் வூகானில்தான் கொரோனா பாதிப்பு பதிவானது. அங்கு, பூஜ்ஜிய கொரோனா விதிகளை அதிபர் ஷி ஜின்பிங் பிறப்பித்துள்ளதால், தற்போது 12 நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வூகானில் உள்ள ஒரு மாவட்டத்தில் 8,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் அக்டோபர் 30 வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "அனைத்திற்கும் நாங்கள் உணர்ச்சியற்றவர்களாக உணர்கிறோம். நாம் மேலும் மேலும் உணர்ச்சியற்றவர்களாக உணர்கிறோம்" என்றார்.
ஊரடங்கினால் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையின் தாயகமான Zhengzhou நகரமும் பாதிக்கப்பட்டது. சீனாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இதுகுறித்து ஷி ஜின்பிங் பேசுகையில், "பூஜ்ஜிய கொரோனா கொள்கையை தளர்த்துவதாக இல்லை. இது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மக்கள் போர்" என்றார்.
அக்டோபர் 24 நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 28 நகரங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. நாடு முழுவதும், சமீபத்திய நாட்களில் சுமார் 200 லாக்டவுன்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டனில் நேற்று இரண்டு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் BQ.1 என்ற உருமாறிய கொரோனாவால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். XBB என்ற உருமாறிய கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு உருமாறிய கொரோனாவும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒமைக்ரான் கொரோனாவில் இருந்து இந்த இரண்டு கொரோனாவும் உருமாறியுள்ளது என்றும் இவற்றில் இருந்து உருமாறும் கொரோனாவால் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் நவம்பர் மாதத்திற்குள் புதிய கொரோனா அலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேபோல சமீபத்தில், ஒமைக்ரான் கொரோனாவிலிருந்து BA.5.1.7 என்ற துணை வகை உருமாறியது. இது, அதிக தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. BF.7 கொரோனா முதல்முறையாக குஜராத் உயிரிதொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.