Anne Frank Birthday: உலகப்போர்.. பூமிக்கு அடியில் பதுங்கல்.. உலகையே உலுக்கிய 13 வயது சிறுமி..! மறக்க முடியாத அனி..!
போர் நடந்துக் கொண்டிருந்த காலம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான வேலைகளுக்குப் வற்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
” துன்பத்தில் இருந்து தனிமையில் இருந்து வெளியேற மனிதர்களுக்கு ஒரே வழிதான் இருக்கிறது. இயற்கைக்கும் கடவுளுக்கும் நெருக்கமான இடங்களுக்கு சென்று தங்களை முழுவதுமாக உணர்ந்துகொள்வதே. இயற்கையின் எளிமையான அழகிற்கு மத்தியில் இருக்கும்போது தான் நாம் நம்மைச் சுற்றி எல்லாம் அதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும் கடவுள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். மனிதர்களின் அத்தனை வகையான துன்பங்களில் இருந்தும் இயற்கை அவர்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது என நான் உறுதியாக நம்புகிறேன்.” – அனி ஃபிராங்
இந்த வரிகளை எழுதியது ஒரு பெரிய தத்துவவாதி இல்லை. உயிருக்கு அஞ்சி பூமிக்கு அடியில் தனது குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகளாக பதுங்கியிருந்த அனி ஃபிராங் என்கிற பதிமூன்று வயதுச் சிறுமி தனது டைரியில் எழுதிய பல்வேறு குறிப்புகளில் ஒன்று இந்த வாக்கியம். இன்று அனி ஃபிராங்கின் பிறந்தநாள்
இரண்டாம் உலகப்போர்
யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அனி மற்றும் அவரது குடும்பத்தினர். ஜெர்மனியில் வசித்து வந்தார்கள். ஹிட்லருக்கு ஆதரவுப் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. நாட்டின் சீர்கேடுகளுக்கு யூதர்களே காரணம் என வெறுப்புப் பிரச்சாரம் நாடு முழுவது நடந்து கொண்டிருந்தது. இதன் காரணத்தால் அனியின் குடும்பம் ஜெர்மனியை விட்டு ஆம்ஸ்டர்டாம் குடிபெயர்ந்தார்கள். தனக்கென ஒரு புதிய வேலையைத் தேர்ந்தெடுத்தார் அனியின் தந்தை. தொடக்கத்தில் சற்று புதிதாக இருந்தாலும் நாளடைவில் புதிய நண்பர்கள் புதிய பள்ளி என சகஜமாகிவிட்டார் அனி.
1939 ஆம் ஆண்டு போலந்து நாட்டை கைப்பற்றினார் ஹிட்லர். அடுத்ததாக அனி வசித்துவந்த ஆம்ஸ்டர்டாமை. யூதர்களுக்கு எதிரான பல்வெறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. யூதர்கள் சொந்தமாக தொழில் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டது. அனியின் தந்தை தனது அலுவலகத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் படிக்ககூடாது என அடுத்த உத்தரவு வந்தது. இதனைத் தொடர்ந்து போர் நடந்துக் கொண்டிருந்த காலம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான வேலைகளுக்குப் வற்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதற்கு பயந்த அனியின் தந்தை தனது அலுவலகத்திற்கு அடியில் ஒரு பதுங்கும் இடத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். இந்த பதுங்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் அனியின் கையில் ஒரு டைரியை கொடுக்கிறார் அவரது தந்தை.
அனியின் டைரி குறிப்புகள்
தனது 13 வயதில் தன்னை சுற்றி நடக்கும் வன்முறைகளை கூட முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாத அனி ஒன்றை மட்டும் உணர்ந்தார். தனது மகிழ்ச்சி தன்பம் இந்த உலகம் எல்லாம் தன்னைவிட்டு பறிக்கப்படுகிறது என்பதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் தனது குடும்பத்துடன் பதுங்கியிருந்தார் அனி. தனது பொழுதுபோக்கிற்காக தன் மனதிற்கு பட்டதை தனது டைரியில் எழுதினார். சின்ன சின்ன வாக்கியங்கள், கதைகள் என எழுதிவந்தார் அனி.
ஒரு நாள் திடீரென்று அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தது ஜெர்மன் ராணுவம். அங்கிருந்து தனது அம்மா மற்றும் தந்தையைப் பிரிந்து தனது அக்கா மார்கரட் உடன் கைதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அனி. சில காலங்களில் அங்கு இருவரும் இறந்தும் போனார்கள்.
70 மொழிகளில் மொழிபெயர்ப்பு:
அனியின் குடும்பத்தில் கடைசியாக உயிர்பிழைத்தவர் அவரது தந்தை மட்டுமே. போர் முடிந்து தாங்கள் பதுங்கியிருந்த இடத்திற்குச் சென்ற அவர் அனியின் டைரியை கைப்பற்றி அதனை ஒரு புத்தகமாக பதிப்பித்தார். இந்தப் புத்தகம் கிட்டதட்ட 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தனது 13 வயதில் இந்த உலகத்தைப் பற்றிய மனிதர்களைப் பற்றிய மிக விரிவான புரிதலைக் கொண்டிருந்தார் அனி. அத்தனை கொடுமையான சூழலிலும் வாழ்வதின் அழகை பற்றியே அவர் தொடர்ந்து தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இன்று பிறந்தநாள்.