Indian American Students : உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியல்...தொடர்ந்து அசத்தும் இந்திய அமெரிக்க மாணவிகள்..!
பட்டியலில் முன்னதாக நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம்பெற்ற நிலையில், தற்போது இந்திய அமெரிக்க பள்ளி மாணவியான சமேதா சக்சேனா இடம்பெற்றுள்ளார்.
உலகின் பிரகாசமான மாணவர்கள் பட்டியலில் இந்திய அமெரிக்க பள்ளி மாணவிகள் இடம்பெற்று அசத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம், இந்த மாணவர் பட்டியலை தயார் செய்துள்ளது.
தரநிலை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 76 நாடுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து புத்திசாலியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவிகள் இடம்பெற்று கலக்கி வருகின்றனர். பட்டியலில் முன்னதாக நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம்பெற்ற நிலையில், தற்போது இந்திய அமெரிக்க பள்ளி மாணவியான சமேதா சக்சேனா இடம்பெற்றுள்ளார்.
9 வயது மாணவியான சமேதா சக்சேனா நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். பேட்டரி பார்க் சிட்டி பள்ளியில் படித்து வருகிறார். இந்த ஆண்டு, SAT, ACT, பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை எடுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத் (CTY) தேர்வில் தகுதி பெற்ற இளம் மாணவிகளில் ஒருவர் சமேதா.
சமேதாவுக்கு பாராட்டு தெரிவித்த CTY நிர்வாக இயக்குநர் டாக்டர். ஏமி ஷெல்டன், "இது, தேர்வில் மாணவர்களின் வெற்றிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அவர்களின் கண்டுபிடிப்பு, கற்றல் மற்றும் அவர்களின் இளம் வாழ்க்கையில் அவர்கள் சேகரித்த அனைத்து அறிவுக்குமான சல்யூட்.
அவர்களின் ஆர்வங்களைக் கண்டறியவும், பலனளிக்கும் மற்றும் செழுமைப்படுத்தும் அனுபவங்களில் ஈடுபடவும், குறிப்பிடத்தக்க விஷயங்களைச் சாதிக்கவும் உலகில் அந்த ஆற்றலைப் பயன்படுத்தும் அனைத்து வழிகளைப் பற்றி சிந்திக்கவும் உதவும்" என்றார்.
நடாஷா பெரியநாயகத்தை பொறுத்தவரையில், அமெரிக்கா நியூ ஜெர்சி மாகாணத்தில் புளோரன்ஸ் எம் கவுடீர் நடுநிலைப்பள்ளியில் மாணவராக உள்ளார். 5ஆம் வகுப்பு மாணவியாக இருந்தபோது, 2021ஆம் ஆண்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத் (CTY) தேர்வை எழுதினார்.
தேர்வின் வெர்பல் மற்றும் குவான்டிடேட்டிவ் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவருக்கு இணையாக நடாஷா மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நடாஷா பெரியநாயகத்தின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்ற நடாஷா, "ஓய்வு நேரத்தில், ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் நாவல்களை படிப்பதையும் டூடுலிங் வரைவதையும் விரும்புவேன்" என்கிறார்.
உலகின் பிரகாசமான மாணவர்கள் பட்டியலில் டெல்லியை சேர்ந்த ஆர்யவீர் கோச்சார் என்ற சிறுவன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில், இந்திய அமெரிக்கர்கள் பல முக்கிய பதவிகளில் உள்ளனர். குறிப்பாக, ஜனநாயக கட்சியின் பைடன் வெற்றி பெற்றதில் இருந்து பல முக்கிய பதவிகளை இந்திய அமெரிக்கர்கள் அலங்கரித்து வருகின்றனர்.
அதேபோல, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் படித்து வருகின்றனர்.