Russias Wagner Group: ரஷ்யாவை கதிகலங்க வைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர்..! யார் இந்த எவ்ஜெனி பிரிகோஜின்?
இவரும், ரஷிய அதிபர் புதினும் எவ்வளவு நட்பாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
உலகின் பலமான ராணுவ படையை கொண்டிருப்பது ரஷ்யா. அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டுள்ள அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் சவால் விடுக்கிறது என்றால் அது எந்தளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். நிலைமை இப்படியிருக்க, ரஷ்ய ராணுவத்திற்கே ஒரு கூலிப்படை சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
வாக்னர் கூலிப்படை:
ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படை சொந்த நாட்டு ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்த கூலிப்படையினர், தற்போது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மாஸ்கோவை நோக்கி செல்லும்படி வாக்னர் கூலிப்படையினருக்கு உத்தரவிட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின். ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமாவதற்கு இவரே காரணம். தொழிலதிபரான எவ்ஜெனி பிரிகோஜின்தான், வாக்னர் கூலிப்படையை தொடங்கியவர்.
யார் இந்த எவ்ஜெனி பிரிகோஜின்?
உக்ரைன் போரின் முகமாக இருந்து வரும் இவர், தன்னை பற்றி விளம்பரம் செய்து கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மோசமான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கும் இவரை போர் களத்தில் அதிகம் காணலாம். சண்டையிடுவதற்காக ஆயிரக்கணக்கான ரஷிய கைதிகளை வாக்னர் கூலிப்படையில் சேர்த்துள்ளார். போரின்போது போதுமான ஆயுதங்களை வழங்கவில்லை என ரஷியா ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
ரஷ்யா அரசின் கேட்டரிங் ஒப்பந்தங்கள், இவரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த பல ஆண்டுகளாக, இவர் 'புதினின் செஃப் (சமையல்காரர்)' என அழைக்கப்படுகிறார். இவரும், ரஷ்ய அதிபர் புதினும் எவ்வளவு நட்பாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். இருவரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்து வளர்ந்தவர்கள்.
1980களில் நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, பிரிகோஜின் தனது சொந்த ஊரில் ஹாட் டாக்ஸை விற்கத் தொடங்கினார். இதை தொடர்ந்து, பல்பொருள் அங்காடிகளில் தவிர்க்க முடியாத ஆளாக மாறினார். இறுதியில், தனது சொந்த உணவகம் ஒன்றையும் கேட்டரிங் நிறுவனத்தையும் திறந்தார்.
கூலிப்படை தொடங்குவதற்கு காரணம் என்ன?
சிறப்பான உணவு வகைகளை வழங்கி புகழ்பெற தொடங்கிய இவரின் உணவகத்தை தேடி விஐபிக்கள் வர தொடங்கினர். அப்போது, துணை மேயராக பதவி வகித்த புதினும் அங்கு வர தொடங்கினார். இதையடுத்து, பிரிகோஜினின் கேட்டரிங் நிறுவனமான கான்கார்ட் அரசாங்க ஒப்பந்தங்களை பெற தொடங்கியது. மிக பெரிய வளர்ச்சி அடைந்தது.
தனியார் ராணுவ குழு ஒன்றை பிரிகோஜின் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம், உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா இணைத்துக் கொண்டபோது தான் தனியார் ராணுவக் குழுவை நிறுவியதாக முதல்முறையாக ஒப்புக்கொண்டார். லிபியா, சிரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் மாலி போன்ற நாடுகளில் வாக்னர் குழு போரில் ஈடுபட்டது.
2014 இல் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இந்த குழு ஆதரவை வழங்கியது.
கடந்த மாதம், கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டை வாக்னர் குழு கைப்பற்றியது. அந்த சமயத்தில், தங்களுக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டதாகவும், தனது ஆட்களை போரில் இருந்து வெளியேற்றிவிடுவோம் என்றும் வாக்னர் கூலிப்படை குற்றம்சாட்டியது.
பொதுவாக, ரஷ்யாவில் அந்நாட்டு ராணுவத்தை யாரும் அவ்வளவு எளிதாக விமர்சித்துவிடமுடியாது. இப்படி, இறுக்கமான அரசியல் சூழலை கொண்ட ரஷ்யாவில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் மீதும் ராணுவ தலைமை மீதும் வாக்னர் கூலிப்படை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது முன்னெப்போதும் நடந்திராத ஒன்று.