கொரோனா எங்கிருந்து பரவியது? தகவல்களை தர மறுக்கும் சீனா: கடுமையாக சாடிய உலக சுகாதார அமைப்பு..!
விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், கொரோனா எப்படி உருவானது என்பது தொடர் மர்மமாகவே இருந்து வருகிறது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனா எங்கிருந்து பரவியது என்பதில் தொடர் மர்மம்:
இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், கொரோனா எப்படி உருவானது என்பது தொடர் மர்மமாகவே இருந்து வருகிறது.
சீனாவில் வூஹான் ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாகவும், நோய் பாதிக்கப்பட்ட விலங்கில் இருந்து பரவியதாகவும் கூறப்பட்டு வந்தது. கொரோனாவின் பிறப்பிடம் குறித்த தகவல்களை தர சீனா மறுத்து வருவதாக ஏற்கனவே சீனா மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதே குற்றச்சாட்டை தற்போது உலக சுகாதார அமைப்பு முன்வைத்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடம் குறித்த தகவல்கள் மற்றும் தரவுகளை தர சீனா மறுத்து வருகிறது. இம்மாதிரியான தகவல்களை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஏன் பகிரவில்லை என சீனாவோ நோக்கி உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு விமர்சனம்:
முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "ஜனவரியின் பிற்பகுதியில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா டேட்டா (ஜிஐஎஸ்ஏஐடி) தரவுத்தளம் பகிர்ந்த தரவு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உடனடியாக அது நீக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு, வுஹானில் உள்ள சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி தொடர்பான தரவு சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்பட்டது.
இது ஆன்லைனில் இருந்தபோது, பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரவைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்தனர். இந்தத் தரவைப் பற்றி எங்களுக்குத் தெரிந்தவுடன், நாங்கள் சீனாவை தொடர்புகொண்டு, அதை WHO மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினோம்.
நோய்க்கிருமிகளின் தோற்றத்திற்கான உலக சுகாதார அமைப்பின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGO) கூட்டம் கூட்டப்பட்டது. மேலும், சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆராய்ச்சியாளர்கள் SAGOவுக்கு தரவுகளின் ஆய்வுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
COVID-19 இன் தோற்றம் பற்றிய ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும்.
இந்தத் தரவுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவைப் பகிர்வதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும், தேவையான விசாரணைகளை நடத்தி முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் சீனாவை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.