H1B Visa என்றால் என்ன? கட்டணத்தை உயர்த்தியது ஏன்? இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? ஓர் அலசல்
ட்ரம்ப் எச்1 பி விசாவின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் H1B Visa என்றால் என்ன? இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? உயர்த்தியது ஏன்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்வது அமெரிக்கா. அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உலக நாடுகளுக்கு தலைவலி என்றே கூற வேண்டும். குறிப்பாக, இந்தியாவிற்கு ஏற்றுமதி வரியை ஏற்றி தலைவலியைத் தந்த ட்ரம்ப், தற்போது புது நெருக்கடியாக எச்1 பி கட்டணத்தை உயர்த்தி பெரும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
எச்1 பி என்றால் என்ன? இந்தியர்களுக்கு ஏன் இதனால் பாதிப்பு என்பதை கீழே காணலாம்.
H-1B விசா என்றால் என்ன?
உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சியின் தொடக்க காலத்தில் அதிகளவு லாபம் அடைந்த நாடாக அமெரிக்கா இருந்தது. மேலும், 1800 காலகட்டங்களுக்கு பிறகே அமெரிக்காவில் வெளிநாட்டு குடியேற்றம் அதிகளவு இருந்தது. குறிப்பாக, 1900 காலகட்டத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி அசுர வளர்ச்சியை நோக்கி வளர்ந்தது. இதனால், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலரும் அமெரிக்காவிற்கு குடிபெயரத் தொடங்கினார்.

தொழில்துறை, தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகளுக்காக அதிகளவு வெளிநாட்டினர் அமெரிக்காவில் குவிந்ததைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு எச்1 பி ( H-1B) விசாவை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. பொதுவாக வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோர்கள் வேலைக்கான விசாவில் செல்வார்கள. அதுபோலத்தான் இந்த H-1B விசா.
தொழில்நுட்பத் துறை:
அமெரிக்காவிற்காக வேலைக்கு அழைக்கப்படும் தொழில்முறை பணியாளர்கள், சிறப்பு திறமையாளர்களுக்கு வழங்கப்படும் விசாவாக இந்த H-1B விசாவை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கணிதவியல் துறையில் சார்ந்தவர்களே இந்த எச்1 பி விசா பெற்று வருகின்றனர். அதாவது, மென்பொருள் எனப்படும் சாஃப்ட்வேர் எஞ்ஜினியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றோர்களுக்கே H-1B விசா வழங்கப்படும்.
தொடக்க காலத்தில் இந்த H-1B விசா 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் வகையில் இருந்தது. பின்னர், இதை 6 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க அரசு மாற்றியது. 2000 காலகட்டத்திற்கு பிறகு உலகளவில் கணினியின் வளர்ச்சி என்பது அபரிமிதமானதாக மாறியது.
71 சதவீதம் பேர்:
இதனால், வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்காவின் பெருநிறுவனங்களுக்கு வெளிநாட்டினர் படையெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக, இந்தியர்கள் அதிகளவு படையெடுக்கத் தொடங்கினர். அமெரிக்காவில் கிரீன் கார்டு வசதி பெற்ற வெளிநாட்டினர் இந்த எச்1 பி விசாவை காலவரையின்றி புதுப்பித்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவின் மென்பொருள் துறையில் மிகப்பெரிய அளவில் பங்காற்றுவது இந்தியர்களே ஆகும். எச்1 பி விசாவை அதிகளவு பெறுபவர்கள் இந்தியர்களே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2024ம் ஆண்டில் எச்1 பி விசா பெற்ற 3 லட்சத்து 99 ஆயிரத்து 395 பேர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் 11.7 சதவீதம் சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
90 லட்சம் ரூபாய் கட்டணம்:
இந்த H-1B விசாவைப் பெறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக அமெரிக்கா வசூலித்து வருகிறது. இந்த கட்டணத்தை எந்த நிறுவனம் தனது பணியாளுக்காக H-1B விசாவை பெற்றுத் தருகிறதோ, அந்த நிறுவனம் அமெரிக்க அரசிற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. தற்போது இந்த கட்டணத்தை இந்திய மதிப்பில் ரூபாய் 90 லட்சமாக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியர்களைப் பொறுத்தமட்டில் அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் அதிகமாக தெரிந்தாலும், அந்த நாட்டினருக்கு அது குறைவான ஊதியமாக தெரிந்தது. இதன் காரணமாகவே இந்தியர்களுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்தது. ஆனால், இதுவே காலப்போக்கில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டினர் பறித்துக் கொள்வதாக குறிப்பாக இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
ஏன் இந்த உயர்வு?
இந்தியர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும், இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்ற குரல் அமெரிக்காவில் தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த சூழலில்தான் ட்ரம்ப் H-1B விசா கட்டணத்தை ரூபாய் 90 லட்சம் வரை உயர்த்தியுள்ளார். ஒரு அமெரிக்க நிறுவனம் தனது ஒவ்வொரு வெளிநாட்டு பணியாளருக்கு இவ்வளவு பெரிய தொகையும் ஆண்டுக்கு H-1B விசா கட்டணமாக செலுத்த முன்வருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக தற்போது மாறியுள்ளது.

ட்ரம்பின் இந்த வரி விதிப்பிற்கு பின்னால் மற்றொரு ஈகோ பிரச்சினையும் காரணமாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவது ரஷ்யாவிற்கு மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதற்கு சமம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி இந்தியாவின் ஏற்றுமதி வரியை 50 சதவீதமாக அதிகரித்தார். வரியை அதிகரித்த பிறகு இந்தியா - ரஷ்யா உறவு மேலும் நெருக்கமானது.
மேலும், இந்தியா ரஷ்யா மட்டுமின்றி சீனாவுடனும் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. இது ட்ரம்பின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததையே காட்டியதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இது ட்ரம்பிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பறிபோகும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு:
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியாத இந்தியாவை மேலும் மிரட்டும் நோக்கிலும், எச்சரிக்கும் வகையிலும் ட்ரம்ப் தற்போது H-1B விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வேலை பறிபோகும் அபாயத்துடன், புதியதாக இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்வதில் சிரமம் உருவாகியுள்ளது.






















