Iran Warns Trump: எங்கள தாக்குனா ‘பலமான பதிலடி‘ கிடைக்கும்.. ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை...
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதில் கூறியுள்ள ஈரானின் உச்ச தலைவர், எங்களை தாக்கினால் பலமான பதிலடி கிடைக்கும் என கூறியுள்ளது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், ஈரானின் மீது குண்டுமழை பொழியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்கா எங்களை தாக்கினால், அவர்களுக்கு பலமான பதிலடி கிடைக்கும் என கூறியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஈரான், அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, புதிய அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச வருமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்து வந்தார். ஆனால், அமெரிக்காவுடன் நேரடியாக பேச முடியாது எனக் கூறிய ஈரான், ஓமன் மூலமாக அமெரிக்காவிற்கு பதில் அளித்து வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லை என்றால், வேறு விதமாக அதை முடிப்பேன் எனக் கூறிய ட்ரம்ப், அதை கடிதம் மூலமாகவும் ஈரானுக்க அனுப்பி, சூசகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அதற்கும் பணியாத ஈரான் அரசு, அமெரிக்கா எங்களுக்கு உத்தரவுகளை போட முடியாது, நாங்க பேச்சுவார்த்தையை நேரடியாக அமெரிக்காவுடன் நடத்த முடியாது, முடிந்ததை செய்துகொள்ளுங்கள் எனக் கூறி, ஓமன் மூலமாக பதில் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், நேற்று விமானத்தில் பறந்தபடியே பேட்டியளித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும், இல்லையென்றால் இது ஒரு மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்று கூறினார். மேலும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார். அதுவும், அந்த தாக்குதல் முன் எப்போதும் அவர்கள் கண்டிராத வகையில் இருக்கும் என்றும் கூறினார். அதோடு, ஈரான் மீது இரண்டாம் கட்ட வரிகளும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ட்ரம்ப்பிற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட ஈரான் அதிபர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன், தாங்கள் பேச்சுவார்த்தையை தவிர்க்கவில்லை என்றும், நேரடியாக பேச முடியாது எனக் கூறி, ஓமன் மூலம் தங்களது நிலையை ட்ரம்ப்பிற்கு தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், மறைமுகமான பேச்சுவார்த்தையை தொடர தங்களது உச்ச தலைவர் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்து ஈரான் உச்ச தலைவர் கூறியது என்ன.?
இந்த நிலையில், ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனேய், அமெரிக்காவிற்கு பலமான பதிலடி கிடைக்கும் எனக் கூறியுள்ளார். நேரலை ஒன்றில் பேசும்போது இது குறித்து கூறிய அவர், தீங்கிழைப்போம் என அவர்கள் மிரட்டுகின்றனர், அவர்கள் அப்படி செய்தால், பலமான எதிர் தாக்குதலை அவர்கள் சந்திப்பார்கள் என எச்சரித்தார்.
இதனிடையே, ”தேவைப்பட்டால் அமெரிக்கா தொடர்பான நிலைகளை தாக்க ஈரான் அதன் நிலத்தடி ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை தயார் செய்து வருவதாக” அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான டெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படி, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் ஈரான் பதிலடி கொடுத்துவருவதால், அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இரண்டு நாடுகளும் தொடர்ந்து அடம்பிடித்து வருவதால், போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

