Kamala Harris: இந்தியர்கள் குஷி - ஆதரவு கிடைச்சாச்சு, அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்
Kamala Harris: அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வாவது பெருமையாக இருப்பதாக, கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
Kamala Harris: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவதற்கான போதிய ஆதரவு, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கிடைத்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவு பெற்ற கமலா ஹாரிஸ்:
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளிடமிருந்து போதுமான வாக்குகளைப் பெற்று, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஆனார் என்று ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு (டிஎன்சி) தலைவர் ஜேமி ஹாரிசன் அறிவித்தார். மேலும்,இம்மாத இறுதியில் சிகாகோவில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் போது, துணை அதிபர் கமலா ஹாரிஸைச் சுற்றி நாங்கள் அணிதிரள்வோம் மற்றும் எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிப்போம் எனவும் ஜேமி ஹாரிசன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வாக்களிப்பு செயல்முறையில், ஹாரிஸ் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் வாக்குகளை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம், அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிபர் வேட்பாளர் ஆன முதல் இந்திய மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.
கமலா ஹாரிஸ் பெருமிதம்:
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஊகிக்கக்கூடிய அதிபர் வேட்பாளராக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக நான் இருப்பதில் பெருமை அடைகிறேன். நான் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த பிரச்சாரம் நாட்டின் மீதான நேசத்தால் தூண்டப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடுவது பற்றியது” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்ததை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் ஹாரிஸை முன்னிறுத்துவதற்கான மெய்நிகர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு செயல்முறை வியாழக்கிழமை தொடங்கியது, பிரதிநிதிகள் பாதுகாப்பான மின்னஞ்சல் மூலம் வாக்களித்தனர். அதில் பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில், ஹாரிஸ் இன்னும் தனது துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவில்லை. வார இறுதியில் அவர் சாத்தியமான வேட்பாளர்களை நேர்காணல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்:
இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கமலா ஹாரிசுக்கான ஆதரவு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. அவரது தேர்தல் பரப்புரைக்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி குவிந்துள்ளது. புதியதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஜனநாயக கட்சியில் புதியதாக இணைந்துள்ளனர். இதனிடையே, கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் நிறவெறி பேச்சு அவருக்கெ எதிராக அமைந்துள்ளது.