Jay Bhattacharya : ”அமெரிக்க சுகாதாரத்துறையில் இந்தியருக்கு பதவி” யார் இந்த ஜெய் பட்டாச்சார்யா?
”அறிவார்ந்த நபர்களாக அறியப்படும் இந்தியர்களை அமெரிக்கா நாட்டின் வளர்ச்சிக்காக ட்ரம்ப் பயன்படுத்த முனைந்துள்ளார்”
அமெரிக்க நாட்டின் தேசிய சுகாதாரத்துறையின் தலைவராக ஒரு இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனை அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது இந்தியர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த இந்தியர் ?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட ஜெய் பட்டாச்சார்யா என்பவரைதான் ட்ரம் தன்னுடைய நிர்வாக குழு மூலம் பரிந்துரை செய்து அமெரிக்க சுகாதாரத்துறையின் தலைவராக நியமனம் செய்ய வாய்ப்பு அளித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஜெய் பட்டாச்சார்யா அங்கு உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கை துறையின் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரின் செயல்பாடுகளை கருத்தில்கொண்டு அமெரிக்க மக்களின் நல்வாழ்விற்காக செயல்படும் தேசிய சுகாதாரத்துறையின் தலைவராக அவரை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
முக்கியத் துறைகளில் இந்தியர்கள் – ட்ரம்ப் கொடுக்கும் முக்கியத்துவம்
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை வீழ்த்தி, 2வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அவர் இந்தியர்களை நியமித்து அவர்களின் அறிவுத் திறனை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, அமெரிக்க அரசு வேலைகளில் உள்ளவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, தீவிரப்படுத்த எலான் மஸ்க் தலைமையில் ஒரு பிரத்யேக குழுவை அறிவித்தார் ட்ரம்ப், அதில் அவருடன் இணைந்து செயல்பட அவருக்கு இணையான அதிகாரங்களுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியையும் ட்ரம் நியமித்து இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு இந்தியரான ஜெய் பட்டாச்சார்யாவிற்கு அமெரிக்க சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை அளித்து கவுரவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
பொதுவாக, இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால், இந்தியர்களுக்கு அவர் பல்வேறு வாய்ப்புகளை அமெரிக்காவில் ஏற்படுத்தித் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை தற்போது ட்ரம்ப் நிறைவேற்றி வருகிறார்.
இந்தியர்களின் அறிவை பயன்படுத்தும் ட்ரம்ப்
இதன் மூலம் அறிவார்ந்த நபர்களாக அறியப்படும் இந்தியர்களை அமெரிக்கா நாட்டின் வளர்ச்சிக்காக ட்ரம்ப் பயன்படுத்த முனைந்துள்ளார். தன்னுடைய இலக்கு அமெரிக்காவை இன்னும் நூறு மடங்கு வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் என்று தேர்தல் பிரச்சாரங்களின்போது அறிவித்த ட்ரம்ப், அதனை அமெரிக்கர்களை மட்டுமே வைத்துச் செய்யாமல், அறிவு, திறமை அதிகம் இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.