Israel Hamas War: இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானம் : நிராகரித்த அமெரிக்கா..
இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த, ஐ.நா சபையில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடு நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர்.
இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 4 நாட்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 4 நாட்களில் ஹமாஸ் தரப்பில் பணயக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்தது. அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 4 நாட்கள் போர் நிறுத்தம் இரு தரப்பினராலும் முறையே கடைபிடிக்கப்பட்டதால் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது. அதன்படி 6 நாட்கள் போர் நிறுத்தத்தின் பயணாக ஹமாஸ் தரப்பில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். அதே சமயம் மேலும் 137 பேர் ஹமாஸ் தரப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ளனர். இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தரப்பில் போர் நிறுத்தத்தை நீடிக்க இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்பதாலும், போர் நிறுத்தம் விதிமுறையை ஹமாஸ் குழுவினர் முறையாக பின்பற்றவில்லை என்றும், எல்லையில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நட்த்தியதால் மீண்டும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
Security Council members fail to adopt resolution calling for a humanitarian ceasefire in the Middle East.
— United Nations (@UN) December 8, 2023
Humanitarian organizations, including UN and partners, have warned that the situation in Gaza is near total collapse. https://t.co/Zs8c7gpx2c pic.twitter.com/8oQC2vMR8l
இஸ்ரேல் ஹமால் இடையே 3 மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே நேற்று ஐ.நா சபையில் போர் முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தது. இந்த தீர்மானத்தில் இங்கிலாந்து நாடு பங்கேற்கவில்லை. அதேசமயம் அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரித்தது.