UK 4 Day Work Week: "இனிமே வாரத்துல 4 நாள்தான் வேலை.." உற்சாகத்தில் பணியாளர்கள்..! யாருக்கெல்லாம் தெரியுமா..?
இங்கிலாந்து நாட்டில் 100 பன்னாட்டு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் பணியாளர்களுக்கான அத்தியாவசிய சலுகைகளை வழங்குவதற்கே தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன. பின்னர், பல நாடுகளிலும் தொழிலாளர்களின் நலனை காப்பதற்காக முறையான சட்டங்கள் வரையறுக்கப்பட்டு பல நாடுகளிலும் தொழிலாளர்கள் நலன்கள் காக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு எம்.என்.சி. எனப்படும் பன்னாட்டு தொழிற்சாலை நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் உள்பட பல்வேறு சலுகைகளை பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றன. தற்போது, இங்கிலாந்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வார பணி நாட்களை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுவாக, பல நாடுகளில் பணிநாட்கள் 6 நாளாகவும், 5 நாளாகவும் இருந்து வருகிறது. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிநாட்கள் ஆகும். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள 100 பன்னாட்டு நிறுவனங்கள் இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணியாளர்கள் பணிபுரிந்தால் போதும் என்ற திட்டத்தை நிரந்தரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய திட்டத்தால் 100 நிறுவனங்களில் உள்ள 2 ஆயிரத்து 600 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். இவர்கள் இவ்வாறு பணிபுரிவதால் இவர்களுக்கு எந்த சம்பள பிடித்தமும் செய்யப்படாது என்றும், வழக்கம்போலவே சம்பளம் வழங்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
70 பன்னாட்டு நிறுவனங்களில் 3 ஆயிரத்து 300 பணியாளர்கள் மத்தியில் இந்த நான்கு நாட்கள் பணிபுரியும் திட்டத்தை பரிசோதனை முயற்சியாக செய்து பார்த்துள்ளனர். அதில், இந்த ஆய்வின் இடைப்பகுதியிலே 88 சதவீதம் நிறுவனங்கள் இந்த திட்டம் மிகவும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். 95 சதவீத நிறுவனங்கள் நான்கு நாள் திட்டத்தில் உற்பத்தி எந்த பாதிப்பை அடையவில்லை என்றும், மாறாக அதிகரித்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
உலகெங்கிலும் லே ஆஃப் எனப்படும் பணியாளர்களை பணிநீக்கம் நடைமுறை கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் சம்பள பிடித்தம் இல்லாமல் நான்கு நாட்கள் மட்டுமே பணிபுரியும் நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்திருப்பது பெரும் வரவேற்பை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Plane Crash: முட்டி மோதி உயர்மின் கோபுரத்தில் சிக்கி தொங்கிய விமானம்.. 1.17 லட்சம் பேர் தவிப்பு.. அமெரிக்காவில் பரபரப்பு!
மேலும் படிக்க: அதிர்ச்சி தோல்வி...வெகுண்டெழுந்த பெல்ஜியம் அணியின் ரசிகர்கள்...பதற்றத்தை ஏற்படுத்திய கலவரம்..!