பெண்களை டார்கெட் செய்து பணியில் இருந்து தூக்கினார்களா? ட்விட்டருக்கு எதிராக வழக்கு...நடந்தது என்ன?
ட்விட்டர் நிறுவனத்தில் பெண் ஊழியர்களை குறிவைத்து பணி நீக்கம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.
முதலில், நிறுவனத்தை வாங்குவாரா இல்லையே என்பதே சர்ச்சையாக இருந்து வந்தது. வாங்கிய பிறகு, ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டது சர்ச்சையானது.
எலான் மஸ்க் மேற்கொண்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று பணி நீக்கம். நிறுவனத்தின் செலவை குறைக்க பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் பெண் ஊழியர்களை குறிவைத்து பணி நீக்கம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று, சான் பிரான்சிஸ்கோ மத்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆண்களை ஒப்பிடுகையில் பெண் ஊழியர்களே அதிகம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 47 சதவிகிதம் மட்டுமே ஆண்கள் என்றும் மீதமுள்ள 57 சதவிகிதம் பெண் ஊழியர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், செலவை குறைக்கும் விதமாக கிட்டத்தட்ட 3,700 ஊழியர்களை ட்விட்டர் பணி நீக்கம் செய்தது. பின்னர், நூற்றக்கும் மேற்பட்டோர் தானாக ராஜினாமா செய்தனர்.
பொறியாளர் பதவிகளுக்கான பணி நீக்க நடவடிக்கையில் பாலின பாகுபாடு வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது. 63 சதவிகித பெண் பொறியாளர்கள் தங்களின் பதவியை இழந்ததாக குற்றம்சாட்டுப்பட்டுள்ளது.
கடந்த மாதம், ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு பெண் ஊழியர்கள், "பணி இடத்தில் பாலின ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதன் மூலம் மத்திய, கலிபோர்னிய சட்டங்களை ட்விட்டர் மீறியுள்ளதாக" குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் இன்னும் எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து பெண் ஊழியர்களின் வழக்கறிஞர் ஷானன் லிஸ்-ரியார்டன் கூறுகையில், "நிறுவனத்தை மஸ்க் வாங்கியவுடன், அவர்களின் திறமை மற்றும் பங்களிப்புகளைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என பெண்களுக்கு இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த மாதத்தில் இருந்து, சான் பிரான்சிஸ்கோ மத்திய நீதிமன்றத்தில் மட்டும், ட்விட்டருக்கு எதிராக மூன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்விட்டரின் இந்நாள், முன்னாள் ஊழியர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் லிஸ்-ரியார்டனே ஆஜராக உள்ளார்.
பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பவில்லை, பணி நீக்கத்திற்கான தொகையை தரவில்லை, மாற்று திறனாளிகளை தொலைதூரத்தில் இருந்து பணி செய்ய அனுமதிக்கவில்லை என பல்வேறு புகார்களை கூறி, ஊழயர்கள் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.