Donald Trump: பரஸ்பர வரி.. நாளை பெரிய அறிவிப்பு.. ட்ரம்ப்பால் கதிகலங்கி நிற்கும் வர்த்தக உலகம்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப நாளை பரஸ்பர வரி குறித்த பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதனால், வர்த்தக உலகம் கலக்கத்தில் உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ரெஸிப்ரோக்கல் அதாவது பரஸ்பர வரி தொடர்பாக, நாளை(02.04.25) முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், அதிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது என்றும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடும் எவ்வளவு வரி விதிக்கிறது என விளக்கிய லியாவிட்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த கரோலின் லீவிட், ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிற்கு விதிக்கும் வரி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்க பால் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 50 சதவீத வரியும், அமெரிக்க அரிசி மீது ஜப்பான் 700 சதவீத வரியும், அமெரிக்க விவசாய உபகரணங்கள் மீது இந்தியா 100 சதவீத வரியும், அமெரிக்க பட்டர் மற்றும் ச்சீஸ் மீது கனடா 300 சதவீத வரியும் விதிப்பதாக லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீண்ட காலமாக இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதித்து, அமெரிக்க தொழிலாளர்களை அலட்சியம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்க பொருட்களை அந்த சந்தைகளில் இறக்குமதி செய்வது சாத்தியமற்ற ஒன்று என்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பல காலமாக ஏராளமான அமெரிக்கர்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்ததாகவும், அதனால் ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளதாகவும் லீவிட் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் வரியிலிருந்து எந்த ஒரு நாடும் தப்பிக்க முடியாது“
இந்நிலையில், தற்போது திருப்பிக் கொடுக்கும் நேரம் என்றும், அமெரிக்க மக்களுக்கு எது சரி என்பதை தீர்மானித்து, வரலாற்று மாற்றத்தை அதிபர் கொண்டுவருவதற்கான சரியான நேரம் இதுதான் என்றும் கரோலின் லீவிட் கூறியுள்ளார். அந்த நேரம் புதன்கிழமை(02.04.25) தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர விரி விதிப்பு குறித்த அறிவிப்பு, புதனன்று ரோஸ் கார்டனில், அமைச்சரவை முன்னிலையில் அறிவிப்பு வெளியாகும் என்றும், அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாம் பதவிக் காலத்தில், ரோஸ் கார்டனில் நடைபெறும் பெரிய நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு எந்தெந்த நாடுகள் எவ்வளவு வரிகளை விதிக்கின்றனவோ, அதே அளவு வரிகள் அந்த நாட்டு பொருட்கள் மீது விதிக்கப்படும் என்றும், இந்தமுறை எந்த நாடும் வரியிலிருந்து தப்ப முடியாது என்றும் கரோலின் லீவிட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப் விதித்த வரிகளால் வர்த்தகப் போர் உருவாகியுள்ளது. இந்நிலையில், நாளை அவர் அறிவிக்கும் புதிய வரிகள் எந்த அளவிற்கு வர்த்தக உலகத்தை நிலைகுலைய வைக்கும் என்று தெரியவில்லை. இதனால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுமே கலக்கத்தில் உள்ளன.





















