India USA: இந்தியா மீது அட்டாக்.. உள்ளடி வேலை பார்க்கும் எலான் மஸ்க்.. கடுப்பான அமெரிக்க அரசு
India USA Musk: இந்தியா மீதான விமர்சனத்தால் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகருக்கும், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

India USA Musk: எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் உள்நோக்கத்துடன் தனது பதிவை விமர்சித்துள்ளதாக பீட்டர் நவேரா குற்றம்சாட்டியுள்ளார்.
”எக்ஸ்” பார்த்த வேலை
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்த ஆலோசகரான பீட்டர் நவேரா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவிற்கு எதிரான மேலும் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டார். ஆனால், அந்த பதிவினை உண்மை சரிபார்ப்பிற்கு உட்படுத்திய எக்ஸ் தளம், நவேராவின் கருத்துகள் பாசாங்குத்தனமானது என குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம், இந்தியா லாபம் அடைவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்தியா மீதான பீட்டரின் அட்டாக்
பீட்டர் நவேரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “உண்மைகள்: இந்தியாவின் அதிக வரிகள் அமெரிக்க வேலைகளை பறிக்கின்றன. இந்தியா லாபத்திற்காக மட்டுமே ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது/ அதன் மூலமான வருவாய் ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. உக்ரேனியர்கள்/ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவு செய்கிறார்கள். இந்தியாவால் உண்மை/சுழல்களைக் கையாள முடியாது” என பதிவிட்டு இருந்தார்.
ஃபேக்ட் செக் சொன்னது என்ன?
எக்ஸ் தளத்தின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்ட அடுத்தடுத்த குறிப்புகளில், “இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் எரிசக்தி பாதுகாப்புக்கானது. அவை தடைகளை மீறுவதில்லை. இந்தியா சில வரிகளைக் கொண்டிருந்தாலும், அமெரிக்கா சேவைகளில் அதனுடன் வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதைத் தொடர்கிறது, இது பாசாங்குத்தனமானது.
நவரோவின் கூற்றுக்கள் பாசாங்குத்தனமானவை. எரிசக்தி பாதுகாப்பிற்காக ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா சட்டப்பூர்வமாகவும், இறையாண்மையுடனும் வாங்குவது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை இல்லை.
இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக அந்நாட்டின் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் அதே வேளையில், அவர்களே யுரேனியம் போன்ற பல ரஷ்ய பொருட்களை இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து தெளிவான இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறார்கள்” என எக்ஸ் தளம் விவரித்துள்ளது.
கடுப்பான பீட்டர் நவேரா
எக்ஸ் தளத்தின் செயல்பாட்டிற்காக அதன் உரிமையாளரான எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்த பீட்டர், உண்மைச் சரிபார்ப்புக் குறிப்பை ஒரு முட்டாள்தனமான குறிப்பு என்றும் சாடியுள்ளார். இதுதொடர்பான எக்ஸ் பதிவில், “அடடே, எலான் மஸ்க் மக்களின் பதிவுகளில் பரப்புரையை அனுமதிக்கிறார். கீழே உள்ள அந்த குறிப்புகள் முட்டாள்தனமானவை. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அது எதையும் வாங்கவில்லை. இந்திய அரசாங்க சுழல் இயந்திரம் அதிக சாய்வில் நகரும். உக்ரேனியர்களைக் கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள்," என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.
உள்ளடி வேலை பார்க்கும் எலான் மஸ்க்:
ட்ரம்பின் தேர்தல் பரப்புரையில் முக்கிய பங்காற்றி, அவரது வெற்றிக்கு எலான் மஸ்க் மிக முக்கிய பங்காற்றினார். தொடர்ந்து, ட்ரம்பின் நிர்வாகத்திலும் மஸ்க் முக்கிய பங்காற்றினார். ஆனால், நாளடைவில் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பிரிந்ததோடு, கடுமையான கருத்து மோதல்களிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. ஆனாலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யா உடனான உறவை பின்பற்றுவதை, பீட்டர் நவேரா கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவிற்கு எதிரான பீட்டர் நவேரா வெளியிட்ட ஒரு பதிவை தான், பாசாங்குதனமானது எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து ட்ரம்பிற்கு எதிராக மஸ்க் உள்ளடி வேலைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





















