Tipu Sultan Sword Auction: அம்மாடியோவ்.. 140 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்..! அப்படி என்ன சிறப்பு..?
பழமையான பொருள்கள், அதிக விலைக்கு ஏலம் போவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் அதிக விலைக்கு ஏலம் போனது.
கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட முக்கியமான மன்னர்களில் ஒருவர் திப்பு சுல்தான். கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700களில் ஆட்சி செய்த திப்புசுல்தான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
யார் இந்த திப்பு சுல்தான்..?
கடந்த 1750ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த திப்பு சுல்தான், மைசூர் பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு காரணமான புதிய நில வருவாய் அமைப்பு உள்பட பல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
காலனித்துவ எதிர்ப்பின் வீரனாகக் கொண்டாடப்படும் திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் வாள் ஒன்று தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
கோடி கணக்கில் ஏலம் போன வாள்:
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு அந்த வாள் விற்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 140 கோடி ரூபாய். ஏலத்தை ஏற்பாடு செய்திருந்த ஏல நிறுவனமான போன்ஹாம்ஸ், "நாங்கள் கணித்ததை விட ஏழு மடங்கு விலைக்கு வாள் விற்கப்பட்டுள்ளது. திப்புவின் ஆயுதங்களில் மிக முக்கியமானவை இந்த வாள்" என தெரிவித்துள்ளது.
போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட், இதுகுறித்து கூறுகையில், "திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன், நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன், வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது" என்றார்.
அசாதாரண வரலாறை கொண்ட ஆயுதம்:
திப்பு சுல்தானின் அரண்மனையில்தான் இந்த வாள் கண்டெடுக்கப்பட்டது. போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தின் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை ஆராய்ச்சி குழு தலைவர் நிமா சாகர்ச்சி, வாள் குறித்து பேசுகையில், "இந்த வாளுக்கு அசாதாரண வரலாறு உள்ளது. வியக்கத்தக்க பழமை மற்றும் நிகரற்ற கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வாளுக்காக இரண்டு ஏலதாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடந்ததில் ஆச்சரியமில்லை. இதன் விளைவாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு, துணிச்சலின் அடையாளமான அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழமையான பொருள்கள், அதிக விலைக்கு ஏலம் போவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் அதிக விலைக்கு ஏலம் போனது.