ஆகாயத்தில் பீட்சா சாப்பிட்டா நெஞ்சம் தாங்குமா- இண்டெர்நெட்டில் ஹிட்டடிக்கும் விண்வெளி பீட்சா பார்ட்டி (வீடியோ)
விண்வெளியில் வீரர்கள் பீட்சா பார்ட்டி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
பீட்சா என்ற உணவு உலகத்தில் பெரும்பாலானவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்தியாவில் பீட்சா ஹட் தொடங்கி, டாமினோஸ் உள்ளிட்ட பல கடைகள் பீட்சா சாப்பிட மிகவும் பிரபலமான ஒன்று. இந்த இடங்களில் அமர்ந்து நாம் பீட்சா சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஆகாயத்தில் அமர்ந்து நாம் பீட்சா சாப்பிடுவதை கற்பனை செய்து பார்த்து இருப்போம். அதை ஒரு குழு விண்கலத்தில் நினைவாக்கி காட்டியுள்ளது.
ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த தாமஸ் பெஸ்கெட் மற்றும் நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் புறப்பட்டனர். இந்த பயணத்திற்கு ஆல்ஃபா மிஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பூமியில் இருந்து சுமார் 400 மையில் தூரம் மேல் சென்று கொண்டுள்ளனர்.
View this post on Instagram
இந்நிலையில் அவர்கள் அந்த விண்கலத்தில் தாமஸ் பெஸ்கெட் மற்றும் பிற வீரர்கள் பீட்சாவை சாப்பிடுவதுபோல் வீடியோ ஒன்று நேற்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தாமஸ் பெஸ்கெட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ஆகாயத்தில் மிதந்தபடியே நண்பர்களுடன் பீட்சா பார்ட்டியை கொண்டாடுகிறோம். பூமியில் சனிக்கிழமை இரவு பார்ட்டி செய்வதுபோல் உள்ளது. நல்ல சமையல் கலைஞர்கள் தங்களுடைய உணவின் செய்முறையை எப்போதும் வெளியே சொல்ல மாட்டார்கள். அதனால் நான் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன். இதை நீங்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் எப்படி அழகாக பீட்சா போல் செய்யப்பட்ட உணவு மிதந்து கொண்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தற்போது வரை 7.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து உள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர். அத்துடன் ஆகாயத்தில் பீட்சா பார்ட்டி கொண்டாடும் விண்வெளி வீரரை பார்த்து சில பொறாமையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த விண்வெளி வீரர்கள் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தரையிறங்க உள்ளனர்.
மேலும் படிக்க:எங்க குரலைக் கேளுங்க... காப்பாத்துங்க.. ஆப்கான் பத்திரிக்கையாளர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்