Dawood Ibrahim : தாவுத் இப்ராகிம் இருக்கிற இடம் இதுதான்.. உண்மையை போட்டுடைத்த உறவினர்.!
இந்திய அரசால் தேடப்படும் நிழலுலக தாதா தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அவரது உறவினர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அரசால் தேடப்படும் நிழலுலக தாதா தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அவரது உறவினர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி தாவுத் இப்ராகிம்:
இந்திய அரசால் தேடப்படும் நிழலுலக தாதாவான தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 1993ல் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கும், பல மோதல்கள் உருவாவதற்கும் தாவுத் இப்ராகிம் தான் காரணம். அவர் பாகிஸ்தானில் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான தாவுத் இப்ராகிம்மின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் துணை போகிறது என்று இந்தியா கடுமையாக குற்றம்சாட்டி வந்தது. பாகிஸ்தான் தாவுத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தநிலையில், தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.
தாவுத் இப்ராகிமின் உறவினரிடம் விசாரணை:
இந்த நிலையில், தாவுத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் அலிஷா பார்க்கர் அமலாக்கத்துறை விசாரணையின் போது தாவுத் இப்ராகிம் பற்றி கொடுத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாவுத் இப்ராகிமிற்கு ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கும், சட்டவிரோத முறையில் பணம் சேர்ப்பதற்கும் யார் யார் உதவி செய்கிறார்கள் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சோட்டா ஷகீலின் மைத்துனர் சலீம் ஃப்ரூட்டை விசாரணை செய்தது.
அந்த வரிசையில், தாவுத் இப்ராகிமின் சகோதரி மகனிடம் நடத்திய விசாரணையில் தான் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையிடம் அலிஷா பார்க்கர் கொடுத்த விளக்கத்தில், தனது குடும்பத்தில் யாரும் தாவுத் இப்ராகிமுடன் தொடர்பில் இல்லை என்றும், ஆனால் அவரது மனைவியான மெஹாஜபீன் தனது மனைவி மற்றும் சகோதரிகளுடன் பண்டிகை நாள்களின் போது தொடர்பு கொண்டு பேசுவார் என்று கூறியுள்ளார். அதே போல அவரது தாய் ஹஷீனா இல்லத்தரசியாக இருந்தபோதும் வாழ்வாதாரத்திற்காக சிறிய பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவார் என்று அலிஷா கூறியுள்ளார்.
அதே போல அவருக்குச் சொந்தமான சில சொத்துகளின் மூலம் வாடகை பெற்று வந்ததாகவும், தொழில் தொடங்குவோருக்கு ரூபாய் 3 முதல் 5 லட்சங்கள் வரை கடன் கொடுத்து உதவி செய்ததாகவும் தகவல் அளித்துள்ளார்.
கராச்சியில் வசிக்கும் தாவுத் இப்ராகிம்:
தாவுத் இப்ராகிம் பற்றி கூறுகையில், தாவுத் இப்ராகிம் தனது தாய் மாமா என்றும், 1986ல் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை தெற்கு மும்பையில் உள்ள டம்பர் வாலா கட்டிடத்தின் நான்காவது மாடியில் தான் குடியிருந்தார் என்று கூறியுள்ளார். அதோடு, அவர் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசிப்பதாக உறவினர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
தாவுத் இப்ராகிம் குடும்பத்தினருடனானத் தொடர்பு:
தாவுத் இப்ராகிம் கராச்சிக்கு இடம்பெயர்ந்தபோது தான் பிறக்கவில்லை என்றும், அவரோ அவரது குடும்பத்தினரோ யாரும் அவருடன் தொடர்பில் இல்லை என்றும் அலிஷா விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், தீபாவளி மற்றும் ரம்ஜான் நேரத்தில் தனது மனைவி மற்றும் தன் சகோதரிகளோடு பேசுவார் என்று கூறியுள்ளார்.
தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், அலிஷாவின் வாக்குமூலம், தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்; அவருக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.