Tamilnadu Weatherman : துபாய்க்கு ஏற்பட்ட அதே கதி கத்தாருக்கா? எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்! மக்களே உஷார்!
இன்றோ அல்லது நாளையே (மே 2) தோஹா மற்றும் ரியாத்தில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகள் மீது மோசமான விளைவுகளை காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
துபாயில் வரலாறு காணாத கனமழை:
அதற்கு சமீபத்தில் இரையான நகரம்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய். வறண்ட வானிலைக்கும் கடும் வெப்பத்திற்கும் பெயர் போன துபாயில் அண்மையில் வரலாறு காணாத மழை பெய்தது. பாலைவனத்திற்கு நிகரான தட்பவெப்ப நிலை கொண்டுள்ள துபாயின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், துபாயின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. செயற்கை மழை காரணமாக துபாயில் இந்த மாதிரியான நிலை ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே பெய்த கனமழை, வெள்ளத்தில் இருந்தே துபாய் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அங்கு மீண்டும் கனமழை பெய்யும் என தமிழ்நாட்டை சேர்ந்த வானிலை நிபுணர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், தோஹா, ரியாத் ஆகிய பகுதிகளின் மழை தொடர்பான அப்டேட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நாளை (மே 2) மீண்டும் மழை பெய்யும்.
மீண்டும் எச்சரித்த தமிழ்நாடு வெதர்மேன்:
இன்று (மே 1) பஹ்ரைனில் கனமழை பெய்யும். இன்றோ அல்லது நாளையே (மே 2) தோஹா மற்றும் ரியாத்தில் கனமழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளார்.
UAE, Baharain, Doha and Riyadh Rain update
— Tamil Nadu Weatherman (@praddy06) April 29, 2024
---------------
2nd May there will be rains again in Dubai, Abu Dhabi and Sharjah.
On 1st May there will be heavy rains in Baharain.
On 1st or 2nd May there will be heavy rains in Doha and Riyadh pic.twitter.com/zrVoa5xeO7
துபாய் கனமழைக்கு கிளவுட் சீடிங் (செயற்கை மழை) பகுதியளவு காரணமாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக பேசிய வானியல் ஆய்வாளர் அஹ்மத் ஹபீப், "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான்பரப்பிலும் மேகத்திலும் கிளவுட் சீடிங் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது" என்று கூறினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு, தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிளவுட் சீடிங் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. செயற்கை மழையை உருவாக்கும் இந்த முயற்சியில் ரசாயனங்கள் மற்றும் சிறிய துகள்கள் (பெரும்பாலும் பொட்டாசியம் குளோரைடு போன்ற இயற்கை உப்புகள்) வளிமண்டலத்தில் தூவப்படுவது குறிப்பிடத்தக்கது.