Afghanistan: 60 ஆயிரம் பெண்களின் வேலைக்கு வேட்டு வைத்த ஆஃப்கானிஸ்தான் அரசு: என்ன காரணம்?
ஆஃப்கானிஸ்தான் நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு ஆணையிட்டத்தன் அடிப்படையில், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பையும் மீறி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கொடு முடிந்துள்ளதால், ஆஃப்கானிஸ்தான் நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்கள் கடந்த செவ்வாய் கிழமை அதாவது, ஜூலை 25ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. இதனால் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாரில் வேலை செய்து வரும் பெண்களை வேலைக்குச் செல்லக்கூடாது என ஏற்கனவே தடை விதித்திருந்ததன் தொடர்ச்சியாக இந்த அரசாணை தலிபான் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலிபான் அரசு அமைந்ததில் இருந்து ஆஃப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் மீதான தடை என்பது மிகவும் அதிகப்படியாக விதிக்கப்படுகிறது.
அழகு நிலையங்களை மூடுவதற்கு தலீபான்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்பது, இஸ்லாம் தடைசெய்த சேவைகளை (அழகு படுத்திக் கொள்ளுதல்) வழங்கியதாலும், திருமண விழாக்களில் மணமகன் குடும்பங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாலும் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்ததாக தெரிவித்தனர் .
அழகு நிலையங்கள் தங்கள் வணிகங்களை நிறுத்துவதற்கு ஒரு மாத காலக்கெடு என்ற அதன் முந்தைய அறிவிப்பு, தலைநகரான காபூலில் அதிகப்படியான அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் கூடிய போராட்டத்துக்கு வழிவகுத்தது. போராட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் டேசர்களைப் பயன்படுத்தி தங்கள் துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுட்டனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் “ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக் குழுவின் (UNAMA) முயற்சிகளை ஆதரிக்கிறார், இதன் மூலம் அழகு நிலையங்களை மூடும் ஆணைக்கு தடை விதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
"பெண்களின் உரிமைகள் மீதான இந்த கட்டுப்பாடு பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்களின் தொழில்முனைவோருக்கான ஆதரவிற்கு முரணானது என்றும் UNAMA கூறியுள்ளது, மேலும் நாங்கள் தடைகளை திரும்பப் பெற விரும்புகிறோம்" என்று UN துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
அழகு நிலையங்களையங்களை மூடுவதற்கான காரணத்தை தாலிபான்கள் தெரிவிக்கையில், அது இஸ்லாத்தை மீறுவதாகக் கூறியது. அதாவது அந்த பட்டியலில், புருவங்களை வடிவமைத்தல், ஒரு பெண்ணின் இயற்கையான முடியை அதிகரிக்க மற்றவர்களின் தலைமுடியைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்கப் செய்தல் ஆகியவை அடங்கும், இது பிரார்த்தனை செய்வதற்கு முன் தேவைப்படும் கழுவுதல்களில் தலையிடுவதாகக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.