Sunita Williams: சுத்தமா முடியல..! ஆனாலும் விண்வெளியில் புதிய சாதனை - சுனிதா வில்லியம்ஸின் சரித்திர சம்பவம்
Sunita Williams Space Walking: விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் என்ற புதிய சாதனையை, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

Sunita Williams Space Walking: விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் மேற்கொண்டவர் என்ற, பெக்கி விஸ்டனின் சாதனையை இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் சாதனை:
விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் என்ற புதிய சாதனையை, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். முன்னதாக இந்த சாதனையை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பெக்கி விஸ்டன் என்ற பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர் தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சர்வதேச விண்வெளி மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெக்கி விஸ்டன் மேற்கொண்ட 60 மணி நேரம் 21 நிமிடங்கள் என்ற விண்வெளி நடைபயணத்தை சுனிதா வில்லியம்ஸ் முறியடித்து, இன்னும் வெளிப்புறத்தில் தான் இருக்கிறார். ரேடியோ தகவல் தொடர்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
92வது ஸ்பேஸ் வாக்:
மேலும், ”சர்வதேச விண்வெளி நிலையத்தின் வன்பொருளை பராமரிக்கவும், டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் ஆகியவற்றில் இருந்து மேற்பரப்பு பொருள் மாதிரிகளை சேகரிக்கவும் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் வாக் மேற்கொண்டார். இந்த ஸ்பேஸ்வாக் எக்ஸ்பெடிஷன் 72 இன் ஒரு பகுதியாக இருந்தது. அவர் மேற்கொண்டது அமெரிக்க சார்பிலான 92வது ஸ்பேஸ் வாக்” எனவும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸிற்கு இது 9வது ஸ்பேஸ் வாக் என்பது, அவருடன் பயணித்த புட்ச் வில்மோர்க்கு 5வது ஸ்பேஸ் வாக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயணமானது சுமார் 6.30 மணி நேரம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
தவறுதலாக விண்ணில் சிக்கிக் கொண்ட வில்லியம்ஸ்:
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார். அதாவது ஜுன் மாதம் 6ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் கேப்சூலில் விண்வெளிக்கு சென்றார். தொடர்ந்து அந்த மாதம் 14ம் தேதியே பூமிக்கு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், கேப்சூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு போன்ற யாரும் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக,பூமிக்கு திரும்ப முடியாமல் 7 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி இருக்கிறார். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது கூட இன்னும் உறுதியாக யாராலும் கூற முடியவில்லை. சுனிதா வில்லியம்ஸ் உடன் பயணித்த புட்ச் வ்ல்மோர் என்பவரும் 7 மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ளார்.
”நடக்க முடியவில்லை..” சுனிதா வில்லியம்ஸ்
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களுடன் கலந்துரையாடிய சுனிதா வில்லியம்ஸ், “நான் நீண்ட காலமாக விண்வெளியில் இருக்கிறேன். இப்போது நடப்பது எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். நான் நடக்கவில்லை. நான் உட்காரவில்லை. நான் படுக்கவில்லை. நானும் சக நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் இவ்வளவு காலம் விண்வெளியில் தங்கியிருப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு "அதிர்ச்சி" என்றும் கூறினார். இந்நிலையில் தான், ஸ்பேஸ் வாக்கில் புதிய சாதனை படைத்துள்ளார். அவரை பூமிக்கு திரும்ப மார்ச் மாதம் இறுதி வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

