Srilanka Crisis : இலங்கையின் மோசமாகும் நிதி நிலைமை.. என்ன நடக்கிறது?
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
இலங்கையில் நிலவும் மக்கள் போராட்டம், உறுதியற்ற அரசு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இவற்றின் விளைவாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
இலங்கைக்கு உலக வங்கி கடன் தர இயலாது என்பதை ஒரு அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.இதைப் போலவே சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இது இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா "IMF ஆதரவு கிடைத்தால் மூன்று பில்லியன் டாலர்கள் இலங்கையின் நட்பு நாடுகளில் இருந்து கிடைக்கும் ,தற்சமயம் அவ்வாறு நட்பு நாடுகளிடமிருந்து பணம் பெற முடியவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை இறக்குமதிக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் , சில கடன்களை மட்டும் நிறுத்தி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனாலும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி மற்றும் வங்கி உலக வங்கி ஆகியவற்றில் இருந்து வாங்கிய கடன்களை நிறுத்தவில்லை என்றும்,அந்த கடன் தொகைகள் முன்பு ஒப்பந்தமிட்டபடி செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்றும்,இது நிறுத்த முடியாத ஒரு கடன் நிலுவை என்றும் கூறினார்.
மற்றொருபுறம் அமெரிக்கா தெரிவித்த குறிப்பில் இலங்கை திவாலாக மற்றும் ஒரு காரணம் சீனாவின் தேவையில்லாத கடன் ஒப்பந்தங்களும் சீனாவுக்கு மட்டுமே ஆதாயம் தருகின்ற திட்டங்களும் ஒரு முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறது. இவ்வாறான மோசமான நிதிநிலை நெருக்கடியிலும் கூட உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை அடிப்படைத் தேவைகளுக்காக வழங்கி இருப்பதாக கூறி இருக்கிறது.
இந்த நிதி கல்வி கட்டண தள்ளுபடி மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும்,இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலான இந்த நிதியைத் தவிர வேறு நிதி வளங்களை இலங்கைக்கு தருவது என்றால் அங்கு மிகச்சரியான பொருளாதாரக் கட்டமைப்புகளுடன் வலுவான சீர்திருத்தங்களை, வரும் அரசுகள் செய்யும் பட்சத்தில் மட்டுமே நிதி அளிக்க முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.அடுத்து வருகின்ற மாதங்கள் இலங்கைக்கு மிகவும் சவாலான மாதங்களாகவே இருக்கும் என்று தெரிகிறது.