srilanka Financial Emergency : அவசர நிலை பிரகடனம் ஆபத்தான நிலை.. கொதிக்கும் எதிர்க்கட்சி. என்ன நடக்கிறது இலங்கையில்?
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமாக பயணத்தை நோக்கி செல்லும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்
அண்டை நாடான இலங்கையில் அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அதிபர் பிறப்பித்துள்ளார்.
இலங்கையில்,அந்நிய செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு சரிந்தது. இதன் காரணமாக, உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல்,அதிக விலைக்கு விற்றல் ஆகியவற்றின் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ’’சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல்,அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக, மேஜர் ஜெனரல் எம்.டீஎஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தது.
சற்று முன் இலங்கைவாழ் தமிழர்களுடன் ஒரு Club House உரையாடல். அங்கு உணவுப் பற்றாக்குறை மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர்கள் சொன்ன நேரடி தகவல். குறிப்பாக மலையகத் தமிழர் நிலை மிக கவலை தருகிறது. நமது கவனம் இதில் தேவை.
— Vasan MSV (@VasanMSV) September 2, 2021
அவசர கால நெறிமுறைகளை ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். "அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான ஒரு செயற்பாடாக கருத வேண்டும்.
2003 ஆம் வருட நுகர்வோர் விவகாரச்சட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை ஒரு ஆபத்தான நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.
ஜனநாயக கொள்கை மிக்க நாட்டை சர்வாதிகாரமிக்க நாடாக மாற்றியமைத்து மனித உரிமைகளுக்கு சவால் விடுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது என்பதை இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியிருப்பதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடையாது. தடுப்பூசிகளையும் பெற முடியாது. பொருட்களின் விலையேற்றத்தையும், வெளிநாட்டு கையிருப்பின் அளவையும் கட்டுப்படுத்தாத அரசாங்கம் நாட்டு மக்களை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது.
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமாக பயணத்தை நோக்கி செல்லும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அச்சட்டத்திற்கு அமைய சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அவசரகால சட்டத்தை கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் முற்றாக எதிர்ப்போம்" என்று தெரிவித்தார்.